சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை:
சேலம் மாநகரின் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர், வறுமை நிலையில் உள்ள பெண்களுக்கு கடன் தருவதாக ஏமாற்றி பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்திய செய்தி நெஞ்சத்தை பதற வைக்கிறது. மணிகண்டனின் அரசியல் பின்னணி குறித்தும் தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
சேலம் பாலியல் வன்கொடுமை குற்றச் செயல்களில் மணிகண்டன் ஒருவர் மட்டுமே குற்றவாளி என விசாரணை எல்லையை சுருக்கி விடாமல், அவருக்கு பின்பலமாக இருந்து செயல்பட்ட நபர்கள் யார் யார் என்பது உள்பட குற்றச் செயலின் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்துவது அவசியமாகும். நீண்ட காலமாக வணிக முறையிலான குற்றச் செயல்கள் நடந்து வந்துள்ள நிலையில், அது காவல்துறையினர் கவனத்துக்கு வராமல் இருந்திருக்க முடியாது என்ற ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது. எனவே, இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
