சென்னை: பசிபிக் பெருங்கடலில் எல்நினோ நிலை உள்ளது எனவும் அது ஜூன் – ஆகஸ்ட் காலாண்டில், வலுவான நிலையை அடைய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு எல்நினோ நிலை உருவாகும் எனச் சொல்லப்ப்ட்டு வந்த நிலையில், தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் எல்நினோவின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத்தில் அது எப்போது வலுவடையும் என்ற முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;
தற்போது, எக்வடோரியல் பசிபிக் பெருங்கடலில் எல்நினோ நிலை உள்ளது. இது எதிர்காலத்தில் அதிகம் வலுப்பட வாய்ப்புள்ளது. பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளன. தற்போது, பசிபிக் மேற்பரப்பு வெப்பநிலை எல்நினோ அடையாளக் குறியீட்டான +0.5°C ஐ கடந்துள்ளன.
காலநிலை முன்னறிவிப்பு அமைப்பு கணிப்புகள், ஜூன்-ஆகஸ்ட் 2026 காலாண்டில், மிதமான முதல் வலுவான எல்நினோ நிலையை காட்டுகின்றன. தற்போதைய ஆய்வுகள் மற்றும் கணிப்புகள், இந்த ஆண்டு கடைசியில் எல்நினோ நிலை வலுப்பட வாய்ப்பு இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன. இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்வாகவே உள்ளது.
மேலும், இயல்பான நிலையில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து நிலவரங்களை கண்காணிக்கும் மற்றும் மாதாந்திர முன்னறிவிப்புகளை வழங்கும். இவ்வாறு அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.
