அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் 40 சதவீத இடங்கள் நிரம்பின

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 40 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையின் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின்கீழ் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,26,959 (ஷிப்ட் -I – 101022 / ஷிப்ட் -II – 25937) சேர்க்கை இடங்கள் உள்ளன.

அதன்படி, 2026-27ம் கல்வியாண்டு இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 7ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்தனர். சென்னையை பொறுத்தவரை மாநில கல்லூரி, ராணி மேரி கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி, டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி, ஆர்.கே.நகர் அரசு கலைக் கல்லூரி, ஆலந்தூர் அரசு கலைக் கல்லூரி என மொத்தம் 8 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

மொத்தமுள்ள 1,26,959 இடங்களுக்கு சுமார் 2,31,274 மாணவர்கள் விண்ணப்பித்தனர். மாணவர்களின் விருப்பக் கல்லூரியாக சென்னை மாநில கல்லூரி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இங்குள்ள 2,380 இடங்களுக்கு சுமார் 45,101 மானவர்கள் விண்ணப்பித்தனர். 2 மற்றும் 3வது இடத்தில் உள்ள கோவை அரசு கல்லூரி மற்றும் நந்தனம் அரசு கல்லூரியில் தலா 37,000 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். 4 மற்றும் 5வது இடத்தில் சென்னை வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் அரசுக் கலைக் கல்லூரியும் ராணி மேரிக் கல்லூரியும் உள்ளன.

விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடந்தது. தொடர்ந்து பொது பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 8ம் தேதி அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் தொடங்கியது. மொத்தம் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகள் உள்ளன. 1,26,959 அனுமதிக்கப்பட்ட இடங்களில் சுமார் 40 சதவீதம் இடங்கள் நிரம்பியுள்ளதாக கல்லூரி கல்வி இயக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநிலக் கல்லூரி, கோவை அரசு கலை அறிவியல் கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி ஆகிய விண்ணப்பங்கள் அதிகம் பெறப்பட்ட கல்லூரிகளில் 2ம் சுற்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது. சென்னை மாநிலக் கல்லூரியில் 2ம் சுற்றுக் கலந்தாய்வு குறித்து பேசிய கல்லூரியின் முதல்வர் ராமன் கூறியதாவது: சென்னை மாநிலக் கல்லூரியில் முதல் சுற்றில் 1,060 இடங்கள் நிரம்பிவிட்டன. தொடர்ந்து கலைப் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. தற்போதுவரை 70 சதவிகித இடங்கள் நிரம்பியுள்ளது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுக்கு 330 வரை கட்-ஆப் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கலைப் படங்களுக்கு 220 வரை கட் ஆப் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களுக்கும் அடுத்த வாரத்தில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மாநில கல்லூரியை பொறுத்தவரை அறிவியல் பாடப்பிரிவுகளான வேதியியல், இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், சைக்காலஜி, பி.காம் மட்டுமல்லாது தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளிலும் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ் பாடப்பிரிவில் 100 இடங்களில் நிரம்பியுள்ளது.

ஆங்கிலப் பாடப்பிரிவில் 100ல் 80 இடங்கள் நிரம்பியுள்ளது. சில கல்லூரிகளில் கணித பாடப்பிரிவில் மாணவர்கள் சேரவில்லை என்பார்கள். ஆனால், மாநிலக் கல்லூரியில் 80ல் 47 இடங்கள் நிரம்பியுள்ளது. சென்னை, நந்தனம் அரசுக் கல்லூரியை பொறுத்தவரை, மொத்தம் உள்ள 1400 இடங்களில் 50 சதவிகித இடங்கள் நிரம்பிவிட்டதாக கல்லூரி முதல்வர் தங்க ராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 220 வரை கட் ஆப் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வணிகவியல், கணினி அறிவியல், வேதியியல் உள்ளிட்ட இடங்கள் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டன. மேலும், கடந்த ஆண்டு முதல் இருபாலர் கல்லூரியாக மாற்றியதில் இருந்து மாணவிகளின் வருகையும் அதிகமாகவே உள்ளது. ஆனால் வளாகத்தில் பெண்களுக்கான தங்கும் விடுதி இல்லாதது தொலைதூர மற்றும் வெளியூரை சேர்ந்த மாணவிகளுக்கு மிகவும் சிரமாக உள்ளது. சென்னை மாநிலக் கல்லுரியைப் போலவே வளாகத்தில் பெண்களுக்கான விடுதிகள் இருந்தால் மாணவிகளின் சேர்க்கையை அதிகபடுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.

Related Stories: