விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு கரூர் ஏடிஎஸ்பி, டிஎஸ்பியிடம் 3 மணி நேரம் சிபிஐ விசாரணை: முக்கிய ஆவணங்கள் ஒப்படைப்பு

கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம்தேதி நடந்த தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வந்தது. தேர்தல் அறிவிப்பையொட்டி நிறுத்தப்பட்ட விசாரணை, 3 மாதங்களுக்கு பிறகு கடந்த 11ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.

2 நாட்களாக நடந்த விசாரணையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 4 சப் இன்ஸ்பெக்டர்கள், 3 போலீசார் என 10 பேரிடம் விசாரணை நடந்தது. நேற்று 3வது நாளாக விசாரணை நடந்தது. இதில் சம்பவத்தின் போது பணியில் இருந்த கரூர் ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த், கரூர் நகர டிஎஸ்பி செல்வராஜ் ஆகியோர் சிபிஐ விசாரணைக்காக நேற்று காலை 10.30 மணியளவில் சிபிஐ முன் ஆஜராகி விளக்கமளித்தனர்.

இந்த விசாரணை மதியம் 1.30 மணி வரை நடந்தது. அவர்கள் அளித்த வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். விசாரணையின் போது முக்கிய ஆவணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக தெரிகிறது. இதன் அடிப்படையில் கூட்ட மேலாண்மை, பாதுகாப்பு ஏற்பாடுகள், நிர்வாக அலட்சியம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை மேலும் தீவிரப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: