வருகிற 17ம் தேதி முதல் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக காங். பிரச்சாரம்: கோட்டாவில் ராகுல் தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் வௌியிட்ட அறிக்கையில், வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் பிரசாரத்தை தொடங்கி உள்ளது. அரசியல் பாகுபாடுகளை கடந்து மாணவர்களை ஒன்றிணைக்கவும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் தொடர் தேர்வு தோல்விகள் மற்றும் வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்கு பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையிலும் இந்த இயக்கம் ஒரு தளத்தை வழங்கும்.

இந்திய இளைஞர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதத்தை காங்கிரஸ் கட்சி கோரும். எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, கோட்டாவில் வருகிற 17ம் தேதி வினாத்தாள் கசிவுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். அலகாபாத்தில் ஜூலை 10ம் தேதி, பாட்னாவில் ஜூலை 11ம் தேதி மற்றும் டெல்லியில் ஜூலை 14ம் தேதி ஆகிய நாட்களில் பெரிய அளவிலான மாணவர் மாநாடுகளையும் ராகுல் நடத்த இருக்கிறார்.

இந்த மாநாடுகள் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுபவர்கள், இளைஞர் அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் தேர்வு முறைகேடுகளால் நேரடியாக பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒன்றிணைக்கும். வினாத்தாள் கசிவுகள், அதிகரித்து வரும் தேர்வுச் செலவுகள் மற்றும் நியாயமான, வெளிப்படையான ஆட்சேர்ப்பு மற்றும் கல்வி முறையை உறுதி செய்வதில் அரசின் தோல்வி ஆகியவற்றால் எதிர்காலம் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் லட்சக்கணக்கான இந்திய இளைஞர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை இந்த பிரச்சாரம் முன்னிலைப்படுத்தும்’’ என்றார்.

Related Stories: