கோழிக்கோடு: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியின் அணுகுமுறையானது இந்தியா கூட்டணியை வலுப்படுத்தவில்லை என்று கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். டெல்லியில் கடந்த 8ம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, அரசியல் காரணங்களுக்காக கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனை தன்னால் கட்டித்தழுவ முடியாது என்று கூறியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக பினராயி விஜயனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதிலளித்த பினராயி விஜயன், யார் யாரைத் தழுவுகிறார்கள் என்பது குறித்து எனக்கு கவலையில்லை. ஆனால் ராகுல்காந்தி நரேந்திரமோடியை தழுவும் புகைப்படத்தை நாம் அனைவரும் பார்த்தோம். மோடியை தழுவிய செயலில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. மாறாக அவரது கருத்துக்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் செய்தியை வெளிப்படுத்துகின்றன.
இது ராகுல்காந்தியின் அணுகுமுறையையும் இந்தியா கூட்டணியை அவர் எவ்வாறு பார்க்கிறார் என்பதையும் பிரதிபலிக்கிறது. இது குறித்து விரிவான விவாதம் தேவை. இப்போது அதுபற்றி விரிவாக பேச விரும்பவில்லை. இந்தியா கூட்டணி இன்று ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியுள்ளது. நாங்கள் மட்டுமல்ல அகிலேஷ் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் போன்ற தலைவர்களும் காங்கிரஸ் அல்லாத பிற முக்கிய கட்சிகளும் கூட கூட்டத்தின்போது ஆட்சேபனைகளை எழுப்பினார்கள்.
காங்கிரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக பேசினார்கள். தற்போதைய சூழல் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையாலும் குறிப்பாக ராகுல் காந்தியின் அணுகுமுறையாலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறையானது இந்தியா கூட்டணியை வலுப்படுத்தவில்லை என்பதே உண்மை. இது பெரும்பாலும் பாஜவுக்கே உதவுகின்றது. இத்தகைய செயல்கள் மூலம் பாஜவின் நலன்களுக்கு சாதகமாக செயல்படும் ஒருவராக ராகுல்காந்தி மாறுகிறார்” என்றார்.
* அமலாக்கத்துறைக்கு துணை போகாதீர்கள்
மார்க்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பேபி தனது எக்ஸ் தளத்தில்,‘‘பினராயி விஜயனை கட்டிப்பிடிக்குமாறு ராகுல்காந்தியிடம் யாரும் கேட்கவில்லை. மாறாக பினராயி விஜயன் மற்றும் பிற எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்யக்கோருவதன் மூலம் அமலாக்கத்துறை மற்றும் மோடி அரசுக்கு துணை போவதை ராகுல்காந்தி நிறுத்த வேண்டும் என்று தான் நாங்கள் கேட்கிறோம். அது எதிர்க்கட்சி தலைவரின் பணி அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.
* ‘மூழ்கும் கப்பலா காங்கிரஸ்’
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல். புத்திசாலிகள் யாரும் அதில் ஏற்மாட்டார்கள் என்று கூறியிருந்த நிலையில், ‘‘புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா(யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத்,பாஜவின் விவகாரமான அரசியலை எதிர்த்து நாம் உண்மையாகவே போராட விரும்பினால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
காங்கிரஸ் கட்சி வலுவடைய வேண்டும். காங்கிரசை விட்டு வெளியேறிய அனைத்து தலைவர்களும் முதலில் ஒன்றிணைய வேண்டும். மூத்த தலைவர் சரத்பவார் இதற்கான முயற்சியை மேற்கொண்டால் அது சாத்தியாகும். இன்றும் கூட பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கண்டு அஞ்சுகிறார். காங்கிரஸ் ஒருபோதும் மூழ்கும் கப்பலாக இருந்தது இல்லை”என்றார்.
