ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் இடிந்து விழுந்த சுற்றுசுவர் ஓராண்டாகியும் சீரமைக்காததால் பொதுமக்கள் அதிருப்தி

ஊட்டி, மார்ச் 8:  ஊட்டி அரசு மருத்துவமனை நுழைவுவாயில் சுற்றுசுவர் இடிந்து விழுந்து ஓராண்டிற்கும் மேலாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்காக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். பலர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவமனை வளாகம் எப்போதும் பிஸியாக காணப்படும். மருத்துவமனை வளாகத்தில் வெளி நோயாளிகள் பிரிவு, ரத்த வங்கி, சித்தா பிரிவு உள்ளிட்டவைகளுக்கு செல்லும் நுழைவுவாயில் பகுதியில் காவலர்கள் தங்கும் கட்டிடத்தை ஒட்டியுள்ள சுற்று சுவர் இடிந்து விழுந்து காணப்படுகிறது.

இடிந்து ஓராண்டிற்கும் மேலாகிய நிலையில் இதனை சீரமைக்க மருத்துவமனை நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இதன் காரணமாக அருகில் உள்ள தடுப்புசுவரும் பலமிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதனை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் சேதமடைந்துள்ள சுற்றுசுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் கூறுகையில், ஊட்டி அரசு தலைைம மருத்துவமனைக்கு மாவட்டம் முழுவதும் இருந்து பலரும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த மருத்துவமனையின் நுழைவுவாயில் பகுதியில் உள்ள சுற்றுசுவர் இடிந்து ஓராண்டிற்கும் மேலாகிறது. ஆனால் இதனை சீரமைக்க அக்கறை காட்டாமல் அப்படியே விட்டுள்ளனர். இடிபாடுகளும் அகற்றப்படாமல் உள்ளது. இதன் காரணமாக விபத்து அபாயம் நீடிக்கிறது, என்றார்.

Related Stories: