மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 4200 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்

ஊட்டி, மார்ச் 8: நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் 4200 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021 வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டிலை கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார்.

இறுதி வாக்காளர் பட்டியல் படி மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் 2 லட்சத்து 81 ஆயிரத்து 762 ஆண்கள், 3 லட்சத்து 03 ஆயிரத்து 270 பெண்கள், மூன்றாவது பாலினத்தவர் 17 பேர் என மொத்தம் 5 லட்சத்து 85 ஆயிரத்து 049 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கொரோனா தொற்று காலம் என்பதால் 1050க்கு மேல் வாக்காளர்கள் உள்ள வாக்குசாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டது.  இதன்படி நீலகிரியில் வாக்குசாவடிகளின் எண்ணிக்கை 868 ஆக அதிகரிக்கப்பட்டது. இதில் 112 வாக்குசாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.

வாக்குசாவடிகளில் சாய்வு தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் 2800 ஆசிரியர்கள் உட்பட 4200 பேர் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வாக்காளர்களுக்கு சானிடைசர் மற்றும் தெர்மல் ஸ்கேன் செய்ய தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிைலயில் பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தேர்தலுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்குசாவடிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டு வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.

Related Stories: