ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நின்றிருந்த லாரி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதால் விபத்து ஏற்பட்டது. இதில், ஒருவருக்கு கால்முறிவு ஏற்பட்டது. துாத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலையைச் சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம் (40). இவர், நேற்று சோப்பு தயாரிக்கும் கெமிக்கலை லாரியில் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருவாரூர் சென்றுகொண்டிருந்தார். அப்போது ராமநாதபுரம் அருகே உள்ள பாப்பாகுடி என்னுமிடத்தில் லாரி டயர் பஞ்சராக நின்றது.
இதனால், லாரிக்கு முன்னாள் சென்ற அதே நிறுவனத்தை சேர்ந்த மற்றொரு லாரி டிரைவர் மதுரை கொட்டப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் (42) என்பவரை உதவிக்கு அழைத்துள்ளார். இருவரும் லாரியை சாலையோரமாக நிறுத்தி டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழித்தடத்தில் சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (41) என்பவர் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடியில் இருந்து நாகப்பட்டினத்திற்கு ஓட்டி வந்த டிப்பர் லாரி பஞ்சராகி நின்ற லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ராமநாதபுரம் பஜார் போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கமுதியை சேர்ந்த காளிராஜ் (28) என்பவர், ராமேஸ்வரத்திலிருந்து ஓட்டி வந்த கார், நின்றிருந்த லாரிகள் மீது மோதியது. இதில் காளிராஜூக்கு கால் முறிவு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். இந்த விபத்து குறித்து பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
