நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை; தமிழக பாஜவில் அதிரடி மாற்றம்: மாநில தலைவர் முதல் முக்கிய நிர்வாகிகள் பலருக்கு சிக்கல்

சென்னை: தமிழக பாஜ நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சியில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான அணியில் இடம்பெற்றிருந்த பாஜ 28 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தலில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், எல்.முருகன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் தோல்வி அடைந்தனர். இது பாஜ டெல்லி மேலிடத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகி தனி கட்சியை தொடங்கியுள்ளார். பாஜ நிர்வாகிகள் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மேற்கு மண்டலத்தில் உள்ளவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது தமிழக பாஜவினர் மத்தியில் பேசும் பொருளாகியுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் பாஜ நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்ட தமிழக பாஜ தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அண்ணாமலையின் புதிய கட்சி தொடங்கியது குறித்தும், அது எந்த அளவுக்கு தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. உட்கட்சி விவகாரங்கள் மற்றும் எதிர்கால வியூகங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சட்டப்பேரவை தேர்தல் தோல்வியை அடுத்து தமிழக பாஜவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. அதாவது, மாநில தலைவர் முதல் முக்கிய நிர்வாகிகள் பலர் மாற்றப்பட உள்ளனர். இது தொடர்பாகவும் சந்திப்பின் போது ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால், விரைவில் தமிழக பாஜவில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று தெரிகிறது.

Related Stories: