தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட திமுக கள ஆய்வு குழுவின் அறிக்கையில் பரபரப்பு தகவல்

சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த ஆராய அமைக்கப்பட்ட திமுக கள ஆய்வு குழுவின் அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட 19 குழுக்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 14ம் தேதி அமைத்தார். இந்த குழுவில் எம்பிக்கள், மாநில நிர்வாகிகள், தலைமை நிலைய செயலாளர்கள், இளைஞர் அணி மாநில நிர்வாகிகள் உள்பட பலர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகள், தொண்டர்களை தனித்தனியாக சந்தித்து கருத்துகள் கேட்டு அறிக்கை தயார் செய்தனர். இதை 19 குழுவினரும் தொகுதி வாரியாக அறிக்கையாக தயார் செய்து அந்த அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளனர்.

இந்நிலையில் திமுகவின் தோல்வி குறித்து கள ஆய்வு குழுவினர் ஆராய்ந்து அளித்த அறிக்கையில் இருந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. கூட்டுறவு சங்கம், ஆவின் உள்ளிட்ட தேர்தல்களை நடத்தாததால் கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மக்கள் குறைகளை அமைச்சர்களிடம் கொண்டு செல்ல உதவியாளர்களே முட்டுக்கட்டை போட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பலமுறை காத்திருந்தும் அமைச்சர்களை பார்க்க முடியாமல் திரும்பி சென்றதாக வேதனை தெரிவித்துள்ளனர். தேர்தல் களத்தில் திமுக அரசு – திமுக கட்சி என இரண்டாக பிரிந்து நின்றதாக தெரிய வந்துள்ளது. கட்சியில் உள்ள இளைஞர்களின் சக்தியை முழுமையாக பயன்படுத்தவில்லை. தற்காலிக நியமன பொறுப்புகளில் கட்சியினருக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. கட்சி பொறுப்பில் இல்லாத மூத்த நிர்வாகிகளை கண்டுகொள்ளவில்லை. டெண்டர் பெரும்பாலும் திமுகவினருக்கு ஒதுக்கவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை போதுமான எண்ணிக்கையில் கொடுக்காதது கிடைக்காத மகளிரிடம் அவநம்பிக்கை ஏற்படுத்தியது போன்றவை தோல்விக்கு காரணமாக இருந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கள ஆய்வுக் குழுவினர் பட்டியலிட்டுள்ளனர்.

Related Stories: