ஆலந்தூர்: வேளச்சேரி இ.பி. காலனி வேல்நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சாந்தி (55). இவர் நேற்று தனது 4 வயது பேத்தியை சைக்கிளில் அமர வைத்து கொண்டு அங்குள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார். ஏஜிஎஸ் காலனி அருகே சாந்தியை பின்தொடர்ந்து காரில் வந்த ஒரு பெண், 3 திருநங்கைகள் சைக்கிளில் இருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு, தடுக்க வந்த சாந்தியை கீழே தள்ளிவிட்டு வேகமாக காரில் தப்பிச் சென்றனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சாந்தி கத்தி கூச்சலிட, ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வேளச்சேரி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி, சம்பவம் நடந்த இடம் ஆதம்பாக்கம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியாக இருந்ததால் ஆதம்பாக்கம் ரோந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து அங்கு வந்த ஆதம்பாக்கம் காவல் நிலைய எஸ்ஐ குழந்தையை பறிகொடுத்த சாந்தியிடம் விசாரணை நடத்தியபோது சாந்தியின் மகன் சரவணனின் (27) மனைவி சந்தியா (23) தான் காரில் 3 பேருடன் வந்து தனது பேத்தியை கடத்திச் சென்றதாக கூறி அழுதார். இதுகுறித்து சாந்தி கூறுகையில், எனது மருமகள் சந்தியா எப்போதும் செல்போனையே பார்த்து கொண்டு இருந்ததால், எனது மகன் கண்டித்துள்ளான். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 25 நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டு மடிப்பாக்கம் மகளிர் போலீசார் சமாதனம் செய்து அனுப்பினர்.
இதனை அடுத்து சந்தியா கோபித்துக் கொண்டு அன்னனூரில் உள்ள அவரது சித்தி வீட்டிற்கு சென்று விட்டார். அன்று முதல் எனது 4 வயது பேத்தி, எங்களுடன் தான் இருந்து வருகிறாள். இந்த நிலையில் தான், நான் பேத்தியுடன் சைக்கிளில் கோயிலுக்கு சென்றபோது, சந்தியா 3 திருநங்கைகளுடன் காரில் வந்து என்னை கீழே தள்ளி விட்டு குழந்தையை காரில் கடத்தி சென்றுவிட்டார், என்றார். மேலும் சந்தியாவிடம் இருந்து தனது பேத்தியை மீட்டுத் தருமாறு புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை காரில் கடத்தி சென்ற சந்தியாவை தேடி வருகின்றனர்.
