சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் வயிற்றுவலி காரணமாக ராமசாமி என்பவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். நள்ளிரவு 12 மணிக்கு மேல் அவருடன் வந்தவர் கொடுத்த மதுவை வார்டில் இருந்தபடியே அருந்தியதால், டாக்டர்கள் சத்தம் போட்டுள்ளனர். உடனே அந்த நபர், மானாமதுரை தவெக எம்எல்ஏ இளங்கோவன் அலுவலக நம்பருக்கு போன் செய்வதாக கூறியபடி, தனக்கு சிகிச்சை அளிக்காமல் வெளியே அனுப்புகிறார்கள் என்று செல்போனில் தெரிவித்துள்ளார்.
உடனே எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்திற்கு புகார் சென்றுள்ளது. இதையடுத்து ராமசாமி மீண்டும் வார்டில் அனுமதிக்கப்பட்டார். மீண்டும் அந்த நபர் பெண்கள் வார்டுக்கு அருகில் மது பாட்டில், மிக்சர் சகிதம் ‘சரக்கு’ ஏற்றத் தொடங்கினார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார், மிக்சர், மது பாட்டிலுடன் இருந்த ராமசாமியை பிடித்து வழக்குப்பதிவு செய்வோம் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
