மயிலாடுதுறை: தமிழக உணவுத்துறை அமைச்சரும், மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான வெங்கட்ரமணன் மயிலாடுதுறை மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார். தர்மபுரம் ஆதீனம் மடத்தில் மடாதிபதியை சந்தித்து கிடங்குகள் அமைக்க நிலம் வழங்க ஆதீனத்திடம் கோரிக்கை வைத்தார். தொடர்ந்து, நத்தம் கிராமத்தில் விவசாயிகளை சந்தித்து, குறுவை சாகுபடி மற்றும் கொள்முதல் நிலையங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து அமைச்சர் வெங்கட்ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது: நுகர்பொருள் வாணிப கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் இல்லாமல் பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் 7500 பேரை நிரந்தரம் செய்வதற்கு பட்டியல் அளித்துள்ளனர். இதுகுறித்து முதலமைச்சரிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நெல்மணிகள் வீணாவதை தடுக்க தேவையான கிடங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தருமபுரம் ஆதீனம் சார்பில் 4 இடங்களில் இடம் வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 40 ரூபாய் லஞ்சம் பெறுவது குறித்த கேள்விக்கு, ‘‘தமிழகத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தங்குமிடம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் ஒரு மூட்டைக்கு ரூ.40 வசூலிக்கப்படுவது உண்மைதான்.
இனி குறுவை, சம்பா சாகுபடி காலங்களில் ரூ.40 வாங்கப்படாது. ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். அனைவரும் ஒருங்கிணைந்து முறைகேட்டை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார்.
