திமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் விலகல்: வீரபாண்டியன் அறிவிப்பு

கோவை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் ஜனநாயக சக்திகளாக உள்ளன. எங்களைப் பொறுத்தவரை அரசியல் ரீதியாக பிரதான எதிரிகள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜ மட்டுமே. தற்போது, திமுகவுடன் கூட்டணியில் இடம்பெறும் சூழல் இல்லை. திமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்துள்ளோம்.

எதிர்காலத்தில் உள்ளாட்சி, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் வரும் போது அன்றைய சூழ்நிலையை பொறுத்து கூட்டணி குறித்து கட்சி முடிவு எடுக்கும். கம்யூனிஸ்ட் இயக்கத்தை யாராலும் தனிமைப்படுத்த முடியாது.  திமுக இந்தியா கூட்டணியில் இல்லை என்று கூறும் நிலையில், அவர்கள் என்ன அரசியல் நிலைப்பாடு எடுக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். பாஜவுடன் எங்களுக்கு எந்த உறவும் இல்லை. அரசியலில் கணிப்புகள் பல நேரங்களில் பொய்யாகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

ஒன்றிய அரசின் பி.எம் கிசான் உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால் கூட்டணியில் நீடிப்பீர்களா என்ற கேள்விக்கு, ‘இப்போதுதான் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. அதற்குள் வாபஸ் பெறுவது போன்ற கேள்விகளை எழுப்புவது பொருத்தமல்ல’ என்றார். அதிமுக, பாஜவுடன் தேர்தலை சந்தித்தது, அது ஜனநாயக சக்தியா என்ற கேள்விக்கு, ‘இனியாவது அவர்கள் உணர்ந்து செயல்பட்டால் அது ஜனநாயகத்துக்கு நல்லது. மாநிலக் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் வலுவாக இருந்தால் தான் ஜனநாயகத்துக்கு வலுசேரும்’ என்றார்.

Related Stories: