குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில் எதிரே இடிந்து விழும் அபாய நிலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த தென்கரை வாய்க்கால் பாலம்

குளித்தலை, மார்ச் 7 : கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் எதிரே தென்கரை வாய்க்கால் உள்ளது இந்த வாய்க்காலில் 1926ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாலம் கட்டப்பட்டது இந்த பாலத்தின் வழியாகத்தான் முசிறி பெரியார் பாலம் கட்டப்பட்டபோது கட்டுமான பொருட்கள் ஏற்றிச் செல்வதற்கு வசதியாக இருந்து உள்ளது. இந்நிலையில் திருச்சி- கரூர் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது நகர்ப்புறங்களில் இருந்து புறவழிச்சாலைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இப்பாலத்தின் வழியாகத்தான் சென்று வருகிறது.

அதேபோல் கரூரிலிருந்து திருச்சியிலிருந்து புறவழிச்சாலை வழியாக குளித்தலை நகருக்கு வரவேண்டிய வாகனங்களும் இவ்வழியாக தான் வந்து செல்கின்றன. மேலும் பள்ளி வாகனங்கள் பொதுமக்கள் சுற்றுப்புற கிராமப்புறத்தில் இருந்து திருவிழா காலங்களில் தீர்த்தக்குடம் பால்குடம் எடுக்கும் பக்தர்கள் வாகனங்களில் வந்து காவிரி ஆற்றுக்கு சென்று நீராடி புனித நீர் எடுத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இப்பாலம் தற்போது 100 ஆண்டு பழமை வாய்ந்த பலமாக இருப்பதால் மிகவும் மோசமான நிலையில் எந்நேரமும் இடிந்துவிழும் அபாய நிலையில் இருந்து வருகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் ஆற்று பாதுகாப்பு பொதுப்பணித்துறை, கலெக்டர், தமிழக முதல்வர் என பல்வேறு தரப்பில் கோரிக்கை மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லை. மேலும் குடிமராத்து பணி நடைபெற்று பல லட்சங்கள் செலவு செய்த தமிழக அரசு இதுபோன்று பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பழமை வாய்ந்த பாலத்தை புதுப்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது பொது மக்களிடையே பெரும் ஏமாற்றம் அடைய செய்துள்ளது. அதனால் பொது மக்கள் நலன் கருதியும் வாகன ஓட்டிகளின் நலன் கருதியும் 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தென்கரை வாய்க்கால் பாலத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: