மின் உபகரணங்கள் திருட்டால் மின்வெட்டா? காதில் பூ சுற்றுகிறது தவெக அரசு: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் தொடர் மின்வெட்டு, தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்றும், மின்உபகரணங்கள் திருட்டால் மின்வெட்டு உண்டாகிறது என்று காதில் பூ சுற்றுகிறது என தவெக அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றது முதல் கடுமையான மின்வெட்டு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் இரவில் தூக்கமின்றி அவதிப்படும் பொதுமக்கள் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், மின்வெட்டு பிரச்னையை தீர்க்க எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்காமல் அலட்சியம் செய்து வரும் தவெக அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நயினார் நாகேந்திரன் (தமிழக பாஜ தலைவர்): சென்னையில் அம்பத்தூர், பெரம்பூர், அரும்பாக்கம், மாங்காடு, மேடவாக்கம் உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான முக்கியப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பலமணி நேரம் நீடித்த தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளது முதல்வர் ஜோசப் விஜய்யின் நிர்வாக தோல்விக்கான சான்று.

‘‘ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்’’ என்று வாக்குறுதியளித்த தவெகவின் பொய்களை நம்பி வாக்களித்த மக்கள், கோடை வெப்பம் பொறுக்க முடியாமல் குழந்தை குட்டிகளுடன் இன்று நடுத்தெருவில் இறங்கி மின்சாரத்திற்காக போராடுவது மிகுந்த வேதனையளிக்கிறது. முந்தைய ஆட்சியில் அணில்களால் மின்வெட்டு ஏற்படுகிறது என்று கதை கட்டினார்கள். தற்போதைய தவெக ஆட்சியில் மின் உபகரணங்கள் திருட்டால் மின்வெட்டு உண்டாகிறது என்று காதில் பூ சுற்றுகிறார்கள்.

மொத்தத்தில் ஆட்சி மட்டும் தான் மாறியுள்ளதே தவிர காட்சியும் மாறவில்லை, மக்களின் கவலைகளும் தீரவில்லை. தனது சொந்தத் துறை இப்படி இருளில் மூழ்கிக் கிடப்பதை கவனிக்காமல், திருப்பரக்குன்ற தீபத்தூணை ஒளிர விட மாட்டோம் என முட்டி மோதிக் கொண்டிருக்கும் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் போன்றோருக்கு அடிப்படை அரசுப் பதவி வகிக்கக் கூட தகுதியில்லை.

டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): முதலமைச்சர் விஜய் சட்டமன்றத் தொகுதியான பெரம்பூர் உள்பட தமிழகமெங்கும் அறிவிக்கப்படாமல் அரங்கேறும் திடீர் மின்வெட்டால் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்கள் வீதிகளில் வந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே மின்வெட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்காது எனவும் அமைச்சர்கள் என்றைக்கு சொன்னார்களோ, அன்று முதலே தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டுகள் தொடர்வது, தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்): தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு நாளும், குறிப்பாக இரவு நேரங்களில், தொடர்ச்சியாக நிகழும் மின்வெட்டுகள் மக்களின் இயல்பு வாழ்க்கையை சிதைத்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில், இந்த நீண்ட நேர மின்வெட்டுகளுக்கான உண்மையான காரணம் என்ன? உற்பத்தி குறைவா? நிர்வாகத் தோல்வியா? பராமரிப்புப் பணிகளா? அல்லது மக்களுக்குச் செல்ல வேண்டிய மின்சாரம் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைகளுக்காக திருப்பி விடப்படுகிறதா?

இன்று மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் இந்த சந்தேகத்தை வெறும் அரசியல் விமர்சனமாகக் கடந்து செல்ல முடியாது. எனவே, தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மின்வெட்டுகள் தொடர்பான உண்மையான காரணங்களை வெளிப்படையாக மக்களிடம் அறிவிக்க வேண்டும். இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு வெளிப்படையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: