திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சை திரித்து பரப்புகிறார்கள் ஆட்சி கலைப்பு-கவிழ்ப்பு என்பது எங்கள் நிலைப்பாடு அல்ல: முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை

சென்னை: விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு எம்எல்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் புதிதாக ஒரு ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிறது. இந்த ஒரு மாதமும் டிவியை பார்த்தாலும் நாளிதழ்களை திருப்பினாலும் கொலையும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைகளும், போதை மருந்து நடமாட்டமும் தான் செய்திகளாக இருக்கின்றன.

பல குற்றச் சம்பவங்களில் தவெக நிர்வாகிகளே சம்பந்தப்பட்டுள்ளனர். ஆளும்கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், சொந்த கட்சிக்காரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்த பெண்ணால் குற்றம் சாட்டப்படும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ மீது இதுவரை நடவடிக்கை இல்லை. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியை விட்டு நீக்கி இருக்கிறது தூய சக்தி என்று கபட வேடம் போடும் அரசு.

“இந்த ஆட்சியை ஆறு மாதம் விமர்சிக்க மாட்டோம்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருந்தாலும், நிலைமை மிக மோசமாகப் போய்வரும் நிலையில் அவர் விமர்சனம் செய்தார். “ஆறு மாதம் அல்ல, மூன்று மாதம் கூட தாங்காது என்ற நிலைமையில் தான் ஆட்சி போய்க்கொண்டு இருக்கிறது” என்று பேசினார். ஆனால், 3 மாதத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அவர் சொன்னதாக திரித்து செய்தி பரப்பப்படுகிறது.

இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் செய்தியாளர்கள் கேட்டபோது, திமுக தலைவர் அப்படி பேசியிருக்கக் கூடாது என்று பேசி உள்ளனர். ஆட்சி கவிழும் என்று தலைவர் பேசவுமில்லை; அது அவரது நிலைப்பாடும் அல்ல. “ஆறு மாதம் வரை, இந்த ஆட்சி பற்றி விமர்சித்துப் பேசப் போவதில்லை” என்று அவர் சொல்லியிருந்தார்.

ஆனால் நாள்தோறும் கொலை, கொள்ளை, அரிவாள் வெட்டுகள், போதை மருந்துகள் நடமாட்டம், பெட்ரோல் குண்டு வீச்சுகள், மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம், பாலியல் வன்கொடுமைகள் நடப்பதைப் பார்க்கும் போது, இதை விமர்சிக்காமல் எப்படி இருக்க முடியும் என்ற பொருளில், “மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது” என்று பொருள்படும்படிதான் சொன்னார்.

ஆசை அறுபது நாள் என்பார்கள். ஆனால் இன்றைய ஆளும் கட்சிக்கு வாக்களித்தவர்கள் ஒரு வாரம் தான் அமைதியாக இருந்தார்கள். சமூகவலைதளங்கள் முழுக்கவே ஆளும் கட்சிக்கு எதிரான ஆவேசமான கருத்துகளைத்தான் மக்கள் சொல்லி வருகிறார்கள். இதைத்தான் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் சுட்டிக் காட்டினார். கலைப்பு, கவிழ்ப்பு எண்ணத்தோடு அல்ல. மக்களே களைத்துப் போய்விட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: