மதுரை: மதுரையில் செல்லூர், மணவாளன் நகர், விவேகானந்தர் தெரு, பீபீ குளம் உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் மஞ்சள் நிறமாக வந்துள்ளது. இந்த குடிநீரை பயன்படுத்தியதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என 25க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலை பரவியது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பரிசோதித்ததில், குடிநீரில் மனிதக்கழிவு பரவி பாலிபார்ம் கிருமிகளால் மஞ்சள் காமாலை பரவி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து டாக்டர்கள், குழாயில் வரும் குடிநீரை குடிப்பதை தவிர்க்கவும், குடிநீரை காய்ச்சிக் குடிக்கவும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதுதவிர, செல்லூர் பகுதியை சேர்ந்த பலரும் மஞ்சள்காமாலை பாதிப்பிற்கு தனியார் மருத்துமவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட சிலர் மஞ்சள் காமாலையுடன், டைபாய்டு, வயிற்றுப்போக்கு பாதிப்பிற்கும் ஆளாகியுள்ளனர்.
இதற்கிடையில் நேற்று மதுரை செல்லூர் பகுதிக்கு வந்த மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ, கல்லாணையை அப்பகுதியினர் சூழ்ந்து முற்றுகையிட்டு, சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர், பொதுமக்களை அழைத்துச் சென்று நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தார். டாக்டர்கள் குடிநீர் மூலமே பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினர்.
இதுகுறித்து எம்எல்ஏ கல்லாணை கூறும்போது, ‘‘இப்பகுதியில் தொடர்ந்து குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருவால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பலரும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தவும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.
