ஊட்டி ஆவின் பாலகங்களில் மாமூல் கேட்டு மிரட்டும் தவெகவினர்

ஊட்டி: தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் மூலம் தனியார் முகவர்களுக்கு ஆவின் பாலகங்கள் நடத்த உரிமங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் ஆவின் பால் மற்றும் வெண்ணெய், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம், மோர் மற்றும் தயிர் ஆகியவை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆவின் பாலகங்களில் தேநீர் மற்றும் ஆவின் உற்பத்தி பொருட்கள் அல்லாத வேறு தனியார் நிறுவன தின்பண்டங்கள் விற்பனை செய்ய அனுமதி இல்லை.

இந்த நிலையில் ஊட்டி நகரில் பல்வேறு இடங்களிலும் உள்ள ஆவின் பாலகங்களுக்கு சென்ற சிலர் தாங்கள் தவெகவில் இருப்பதாக அறிமுகப்படுத்தி கொண்டு, ஆவின் பாலகங்களில் வெளியில் இருந்து தின்பண்டங்கள் கொண்டு வந்து விற்பனை செய்கிறீர்களா? என மிரட்டும் தொனியில் கேட்டுள்ளனர். அவ்வாறு விற்பனை செய்தீர்கள் என்றால் உரிமத்தை ரத்து செய்து விடுவோம்.

நாங்கள் ஆளுங்கட்சி என்பதால் நாங்கள் எது சொன்னாலும் நடக்கும். அதனால் எங்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டும் என கூறி மிரட்டியுள்ளனர். ஆவின் பாலகம் நடத்துவோர் அவ்வாறு எதுவும் வெளி பொருட்களை விற்பதில்லை என கூறிய போதும், மாமூல் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் ஊட்டி நகரில் ஆவின் பாலகங்கள் நடத்துவோர் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories: