மதுரை: மதுரையைச் சேர்ந்த நல்லதம்பி, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது நான் அசம்பாவித செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறி, மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் என்னிடம் பிணை பத்திரம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். உள்துறை செயலர் கடந்த 2025ல் பிறப்பித்த அரசாணையில், காவல்துறையில் துணை கமிஷனருக்கு மாஜிஸ்திரேட்டிற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணை காலவரம்பின்றி அதிகாரங்களை வழங்கியுள்ளது, இது சட்டத்திற்குப் புறம்பானது.
காவல்துறை அதிகாரிகளுக்கு நிர்வாக நடுவருக்கான அதிகாரங்களை வழங்கும் வகையிலான அரசாணையை செல்லாது என உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் இந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தனர். இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர், இடைக்கால தடையை நீட்டித்து, மனுவிற்கு உள்துறைச் செயலர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 17க்கு தள்ளி வைத்தனர்.
