தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு கூட்டம் நேற்று துவங்கியது. மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமை வகித்தார். அகில இந்திய பொதுச்செயலாளர் பேபி, அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் ராகவலு, பாலகிருஷ்ணன், வாசுகி, மாநில செயலாளர் சண்முகம், மத்திய கட்டுப்பாடு குழு தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். கூட்டம் இன்றும் நடக்கிறது.
முன்னதாக பேபி அளித்த பேட்டி: இந்தியா கூட்டணி என்பது நாட்டில் உள்ள மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளின் ஒரு பரந்த கூட்டணியாகும். குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாஜவின் வகுப்புவாத சக்திகளை எதிர்த்து போராடுவதே இதன் அடிப்படை நோக்கம். இந்தியா கூட்டணியில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும், இக்கூட்டணியை எவ்வாறு மேலும் வலுப்படுத்தலாம் என்பது குறித்து தீவிரமாக சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
இந்தியா கூட்டணியின் தலைவர்கள், குறிப்பாக காங்கிரஸ் தலைமை, சில நேரங்களில் மிகவும் முதிர்ச்சியற்ற முறையில் நடந்து கொள்கிறது. உதாரணமாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கேரளாவில் எல்.டி.எப் மற்றும் பா.ஜவுடன் ரகசிய உடன்பாடு வைத்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழக மக்கள் பா.ஜ.வை தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர். சமீபத்திய தேர்தலில் அவர்களின் பலம் 5லிருந்து 1 ஆகக் குறைந்துள்ளது. எனவே, தமிழகத்தில் பா.ஜ எந்தவொரு குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, கட்சியின் தமிழக மாநிலக்குழு இந்தக் கூட்டத்தில் விவாதித்து அதன் முடிவை அறிவிக்கும். இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்தியா கூட்டணியில் திமுக தொடர்வது குறித்து அவர்களின் நிலைப்பாடு தெரிந்தவுடன், அது குறித்து எங்களது கருத்தை தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
