ஹிட்லர் ஆட்சியை ஒப்பிட்ட ரேவந்த் ரெட்டி; காங்கிரஸ் ஒரு ‘அகில இந்திய நாஜி கட்சி’- ராகுல் காந்தியை விளாசிய கேடிஆர்

 

ஐதராபாத்: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் சர்வாதிகார பேச்சுக்கு பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி.ராமராவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நீர்நிலைகளைப் பாதுகாக்கவும் ஐதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்து பாதுகாப்பு அமைப்பு (ஹைட்ரா) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரின் செயல்பாடுகளை முன்னுதாரணமாகக் குறிப்பிட்டுப் பேசியதாகத் தெரிகிறது.

ஜனநாயக நாட்டில் ஒரு முதல்வர், உலகமே வெறுக்கும் ஒரு சர்வாதிகாரியின் பாணியைப் பாராட்டிப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்கட்சியான பிஆர்எஸ் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வந்தன. இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி.ராமராவ் (கேடிஆர்) தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அதில், ‘ராகுல் காந்தியின் அன்பின் கடை (மொகபத் கி துக்கான்) என்பது தற்போது ஹிட்லரின் வீடாக மாறிவிட்டதா? டெல்லியில் அரசியலமைப்பின் பாதுகாவலர் போல நாடகமாடும் ராகுல் காந்தி, ஹிட்லரின் கொலைப் படைகளைத் தனது செயல்பாட்டுக்கு உத்வேகமாகப் பேசும் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பேச்சுக்கு மவுனமாக இருப்பது ஏன்? சர்வாதிகார முறைகளைக் கொண்டாடும் காங்கிரஸ் கட்சி தனது பெயரை ‘அகில இந்திய நாஜி கட்சி’ என மாற்றிக்கொள்ளலாம்.

உங்களின் மவுனம் இந்த அராஜகத்தை ஆதரிப்பதாகவே அமைகிறது’ என்று பதிவிட்டுள்ளார். இதனிடையே, கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயனும் ரேவந்த் ரெட்டியின் இந்தப் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். ஜனநாயக சமூகத்திற்கு இது மிகவும் அவமரியாதையான செயல் என்றும், புல்டோசர் ராஜ்ஜியத்தை அமல்படுத்த உலகிலேயே மிகக் கொடூரமான சர்வாதிகாரியை முன்னுதாரணமாக கொள்வது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: