காமன்வெல்த் விளையாட்டு போட்டி பாரா பவர் லிப்டிங்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: ரிக்‌ஷா டிரைவர் ஜாந்து குமார் சாதனை

* போலியோ பாதிப்பு, வறுமை
பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டத்தில் 1997ல் பிறந்த ஜாந்து குமார், 5வயதாக இருக்கும்போது போலியோவால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஏழ்மையான குடும்பப் பின்னணி, காய்கறி வியாபாரம், இ-ரிக்‌ஷா ஓட்டுதல் என வயிற்றுப் பிழைப்பை ஓட்டினாலும், தனது மனம் தளராத கடுமையான முயற்சியால் இன்று 2026 காமல்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற சாதனையாளராக உயர்ந்து நிறகிறார் ஜாந்து குமார்.

அதிகாலையில் எழுந்து, 20 கி.மீ. தொலைவில் உள்ள காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு ஷேர் ஆட்டோவில் பயணம்… அதிலும் கடைசி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை வசதி மோசமாக இருக்கும் என்பதால் கையால் இயங்கும் மூன்று சக்கர சைக்கிளில் செல்ல வேண்டும். மாலை 4.00 மணிக்கு காய்கறி கடையை மூடிவிட்டு கடுமையான பயிற்சி.

தொடக்கத்தில் குண்டு எறிதல், வட்டு எறிதலில் ஈடுபட்ட ஜாந்து குமார், பின்னர் பயிற்சியாளர்களின் ஆலோசனைப்படி பவர்லிப்டிங்கில் இறங்கி சாதித்திருக்கிறார். மேம்பாலப் பணிக்காக காய்கறி கடையை இடித்துவிட்டதால் இ-ரிக்‌ஷா ஓட்டி பிழைத்து வந்த ஜாந்து, ஒரு கட்டத்தில் தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக கொஞ்சமும் யோசிக்காமல் தனது இ-ரிக்‌ஷாவையே விற்றுள்ளார்.

* கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தில் நடக்கும் 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள் ஹெவிவெயிட் பாரா பவர் லிப்டிங்கில் மாற்றுத்திறனாளியும் இ-ரிக்‌ஷா ஓட்டுனருமான ஜந்தா குமார், இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

ஆர்மடில்லோ அரங்கில் இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியின் பி பிரிவில் இடம் பெற்றிருந்த ஜாந்து குமார் (28 வயது), 130.9 புள்ளியுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். இறுதி முயற்சியில் சிறு தவறிழைத்ததால் ஜாந்து தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு நூலிழையில் நழுவியது குறிப்பிடத்தக்கது.

பி பிரிவில் ஜாந்து 190 கிலோ எடை தூக்கி (130.9 புள்ளி) முதலிடம் பிடித்தாலும், ஏ பிரிவில் சிறப்பாக செயல்பட்ட நைஜீரியா வீரர் ரிலுவா ஐட்ரிஸ் (132.8) தங்கப் பதக்கமும், இங்கிலாந்தின் மேத்யூ ஹார்டிங் (131.0) வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இரண்டாம் இடம் பிடித்த ஹார்டிங்கை விட வெறும் 0.1 புள்ளி மட்டுமே ஜாந்து பின்தங்கினார்.

’கணக்கீட்டுப் பிழையும், தகவல் பரிமாற்ற குளறுபடியுமே ஜாந்து தங்கப் பதக்கத்தை இழக்கக் காரணம்’ என்று பயிற்சியாளர் ராஜிந்தர் சிங் ரஹேலு கூறியுள்ளார். 2-3 கிலோவுக்கு 2 புள்ளி கிடைக்கும் என்ற நிலையில், ஜாந்து தனது கடைசி முயற்சியில் 196 கிலோவுக்கு செல்லாமல் 193 அல்லது 194 கிலோ தூக்க முயன்றிருந்தால் தங்கம் அல்லது வெள்ளி கிடைத்திருக்கலாம்.

* பிரதமர் வாழ்த்து
காமன்வெல்த் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள ஜாந்து குமாருக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் பிரதமர் பதிந்துள்ள தகவலில், ‘ஜாந்து குமாருக்கு எனது வாழ்த்துக்கள். அவரது சாதனை… கடுமையான முயற்சிக்கும் மன உறுதிக்கும் பல ஆண்டு கால கடின பயிற்சிக்கும் கிடைத்த வெற்றி. கடுமையான சவால்களை முறியடித்து சர்வதேச அரங்கில் சாதித்துள்ள அவர், ஒட்டுமொத்த தேசத்துக்கும் பெருமை சேர்த்துள்ளதுடன் எண்ணற்ற இளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக விளங்குகிறார்’ என்று பாராட்டி உள்ளார்.

* நிறைவு விழாவில் சங்கர் மகாதேவன்!
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவில் இந்தியாவை சேர்ந்த பிரபல பாடகர், இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் தனது மகன்கள் சித்தார்த் மற்றும் ஷிவம் உடன் இணைந்து இசை மழை பொழிய உள்ளார். பாஹ் மில்கா பாஹ், 83 படத்தில் இருந்து லெஹ்ரா தோ, வந்தே மாதரம் உள்பட பல பாடல்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளன. நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நிறைவு விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளதால், கொடியை முறைப்படி ஒப்படைக்கும் நிகழ்ச்சியும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

* காலிறுதிக்கு முந்தய சுற்றில் பாக்சர் சச்சின் சிவாச்
காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் ஆண்கள் குத்துச்சண்டை 60 கிலோ எடை பிரிவு ரவுண்ட் ஆப் 16ல் விளையாட, இந்தியாவின் சச்சின் சிவாச் தகுதி பெற்றார். ரவுண்ட் ஆப் 32ல் கனடாவின் கியோமா அல் அகமதியா உடன் நேற்று மோதிய சச்சின் சிவாச் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். காலிறுதிக்கு முந்தய சுற்றில் அவர் இங்கிலாந்தின் வில்லியம் ஹெவிட் சவாலை சந்திக்கிறார்.

* நீச்சலில் ஏமாற்றம்
ஆண்கள் 400 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் பங்கேற்ற தல்ஷன் சசிகுமார், தகுதிச் சுற்றில் 7வது இடம் பிடித்து (3:58.09) நூலிழையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை நழுவவிட்டார். தகுதிக்கான நேரம் 3 நிமிடம், 57.70 விநாடி என்பது குறிப்பிடத்தக்கது. இதே பிரிவில் பங்கேற்ற ஆர்யன் நெஹ்ரா (4:00.26) 8வது இடம் பிடித்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

* டை-பிரேக்கரில் அசத்தல்
மகளிர் லான் பவுல் போட்டியில் டோங்காவுடன் மோதிய இந்தியாவின் பிங்கி ரூபா ராணி ஜோடி 2-1 என்ற செட் கணக்கில் டை-பிரேக்கரில் கடுமையாகப் போராடி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அடுத்து நமீபியா, இங்கிலாந்து அணிகளுடன் இந்திய ஜோடி மோதுகிறது.

* ஃபுளூ காய்ச்சல் அபாயம்
ஸ்காட்லாந்தில் தற்போது மழைக்காலம் என்பதுடன் மிகக் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவுவதால், காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் சளி, இருமல், ஃபுளூ காய்ச்சலால் அவதிப்படும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது. இதைத் தொடர்ந்து, இந்திய குழுவினர் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: