மணிலா: பிலிப்பைன்ஸ் கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலைநடுக்கம் ஏற்பட்டது. இதில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவோ மாகாணத்தில் கடலோரப் பகுதியில் நேற்று காலை 7:37 மணியளவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.8 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. ஜெனரல் சாண்டோஸ் நகருக்கு தென்மேற்கே சுமார் 13கி.மீ. தொலைவில் கடல் பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகி இருந்தது. நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தின் காரணமாக பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. முக்கிய இணைப்பு பாலம் உட்பட பல கட்டமைப்புக்களில் ஆபத்தான விரிசல்கள் ஏற்பட்டன.
இங்கு 7 பேர் உயிரிழந்தனர். சுமார் 130 பேர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்து இருந்தது. சுமார் 3அடி உயரமுள்ள சுனாமி அலைகள் தாக்கியதால் நகரில் பலத்த சேதங்கள் ஏற்பட்டு இருந்தது. சுமார் 5 மணி நேரத்திற்கு பின் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. இங்கு பள்ளி கட்டிடம் இடிந்ததில் பல மாணவர்கள் அதில் சிக்கியிருப்பதாகவும், 12 பேர் காணாமல் போயுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் டாவோவ் ஓரியண்டல் மாகாணத்தில் வணிக வளாகங்கள், அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள் நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கடுமையாகக் குலுங்கின. இங்கு ஒருவர் உயிரிழந்தார். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சரங்கானி, தெற்கு கோட்டாபாட்டோ, டாவோ ஆக்சிடென்டல் ஆகிய தெற்கு மாகாணங்களிலும், பலுட் திவிலும் இடிந்துவிழுந்த கட்டிட இடிபாடுகள், சேதமடைந்த மசூதிகள் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றின் காரணமாக மற்ற உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பீதியடைந்து மேடான பகுதிகளுக்குத் தப்பி ஓடினர். குறிப்பாக டாவோ நகரில் உள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
