சென்னை: சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட திமுக கள ஆய்வு குழு நாளை மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை அளிக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய 38 பேர் கொண்ட கள ஆய்வு குழுவை மு.க.ஸ்டாலின் நியமித்தார். ஒரு மாதம் காலம் இந்த குழு 234 தொகுதிகளுக்கும் சென்று கருத்துகளை கேட்டது. நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.
கருத்து கேட்பில் முக்கியமான கருத்துகளை திமுக நிர்வாகிகள் முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சியினர் தேர்தல் பணிகளுக்கு ஒத்துழைக்கவில்லை. வரும் காலங்களில் திமுக தனித்து களம் காண வேண்டும். தனித்து போட்டியிடும் முடிவினை திமுக எடுக்க வேண்டும் என்ற கருத்தை நிர்வாகிகள் முன்வைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தேர்தல் நேரத்தில் உட்கட்சி பிரச்னை சரி என்பது சரிசெய்யப்படவில்லை. அது தேர்தலில் எதிரொலித்துள்ளது. அதேபோல மாவட்ட செயலாளர்கள், பொறுப்பு அமைச்சர்கள் பலர் மீது நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்ததாகவும் கூறப்படுகிறது. திமுகவினர் மனம் விட்டு பேசிய அனைத்து கருத்துகளும் அறிக்கையாக தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வெளியான பின்னர் அதில் என்னென்ன விசயங்கள் இடம்பெற்றுள்ளன என்பது தெரியவரும். அந்த அறிக்கையின் அடிப்படையில் திமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கள ஆய்வு குழு அறிக்கை அளித்த பின்னர் என்ன மாதிரியான மாற்றங்களை மேற்கொள்வது என்று ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
அதாவது கட்சி ரீதியாக அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளது. திமுகவை பொறுத்தவரை தற்போது 78 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இவர்களிடம் குறைந்தபட்சம் 2 தொகுதிகள் முதல் அதிகபட்சம் 6 சட்டப்பேரவை தொகுதிகள் வரை உள்ளது. இந்த மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 100க்கும் மேல் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு உயர்த்தும் பட்சத்தில் ஒரு மாவட்ட செயலாளர்களுக்கு குறைந்தபட்சம் 2 தொகுதிகள், அதிகபட்சம் 4 தொகுதிகள் வரை வழங்கப்படும் என்று தெரிகிறது.
புதிய மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு நீண்டநாளாக கட்சிக்கு உழைப்பவர்களுக்கு முன்னுரிமை தர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் குற்றச்சாட்டுக்கு உருவாகியுள்ள மாவட்ட செயலாளர்களை மாற்றி விட்டு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படவும் உள்ளனர். அதில் இளைஞர்கள், பெண்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விரைவில் திமுகவில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்ற பரபரப்பு தொண்டர்களிடையே எழுந்துள்ளது.
