வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், ஊடகவியலாளருடன் ஏற்பட்ட காரசாரமான மோதலால் பேட்டியை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் ‘மீட் த பிரஸ்’ நிகழ்ச்சிக்காக பிரபல என்.பி.சி நியூஸ் ஊடகத்திற்கு அதிபர் டிரம்ப் பேட்டியளித்தார். அப்போது, கடந்த 2020ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் கலிபோர்னியா மாகாணத்தில் ஓட்டு எண்ணிக்கை தாமதமாவது முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக கூறினீர்களே, அதற்கான ஆதாரங்கள் உள்ளதா என்று ஊடகவியலாளர் கிறிஸ்டன் வெல்கர் கேள்வி எழுப்பினார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதத்தின் உச்சகட்டமாக, ஊடகவியலாளரை பார்த்து ‘நீங்கள் நேர்மையற்றவர் அல்லது முட்டாளாக இருக்கிறீர்கள்’ என்று டிரம்ப் சாடினார். மேலும் ‘அப்போது நடந்த தேர்தலின் போது நிறைய முறைகேடுகள் நடந்தன. தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி நடந்தது. என்னிடம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன, தேர்தல் திருடப்பட்டது. பொய் செய்திகளை வெளியிடும் ஊடகங்களால் ஒரு நாடு ஒருபோதும் பெருமை அடைய முடியாது’ என்று கூறிய டிரம்ப், தொடர்ந்து ஆதாரங்களை கேட்டதால் எரிச்சலடைந்தார்.
பின்னர், ‘பேட்டி கொடுத்தது போதும், நாம் இதோடு நிறுத்திக் கொள்வோம், நன்றி அன்பே’ என்று கூறிவிட்டு தனது மைக்கை கழற்றி எறிந்துவிட்டு டிரம்ப் பாதியிலேயே வெளியேறினார். அதிபர் டிரம்ப், பேட்டியை பாதியிலேயே முடித்துக் கொண்டது சர்வதேச அளவில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
