நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் செங்கல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்த படியாக செங்கல் சூளை மற்றும் மண்பாண்ட தொழில்கள் பிரதானமாக உள்ளன. குமரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் மண்பானைகள் வெளிநாடுகளுக்கும் அதிகளவில் கொண்டு செல்லப்படுகின்றன. கூட்டுறவு சங்கங்களும் இயங்கி வருகின்றன. மாவட்டத்தில் சுங்கான்கடை, தேரூர் உள்ளிட்ட பகுதிகளில் மண்பானை தொழிலாளர்கள் உள்ளனர். இதே போல் ஆரல்வாய்மொழி, தோவாளை, கொட்டாரம், குமரன்புதூர் உள்ளிட்ட இடங்களில் விவசாயமும், செங்கல்சூளை தொழிலும் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
குறிப்பாக அகஸ்தீஸ்வரம், தோவாளை தாலுகாக்களில் 500க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இருந்து வருகின்றன. இந்த தொழில்கள் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகிறார்கள். விவசாய நிலத்தில் உள்ள பயனற்ற மண்ணை எடுத்து செங்கல் தயாரிக்கும் தொழிலுக்கும், மண்பானை தொழிலுக்கும் பயன்படுத்தி வந்தனர். மலட்டுத்தன்மையுள்ள மண் அப்புறப்படுத்தப்பட்டதால் விவசாயமும் தடையின்றி நடக்கும் என்பதால், அவ்வப்போது மலட்டு தன்மை கொண்ட மண்ணை எடுக்க விவசாயிகள், செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
இதன் மூலம் செங்கல்சூளை தொழில்கள் குமரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக மாறியது. வட மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் குமரி மாவட்ட பகுதிகளில் குடியேறி, செங்கல் சூளைகளில் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால், செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் செங்கல் சூளைகள் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் உள்ளனர்.
செங்கல் சூளைகள் சரியாக செயல்படாததால், இவர்களில் பலர் வருமானம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தென் மேற்கு பருவமழையால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்படும். இந்த நிலையை சமாளிக்க அரசு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
