தனியார் பள்ளிகளில் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டண விவரங்கள் இணையத்தில் வெளியீடு

 

சென்னை: தனியார் பள்ளிகளில் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டண விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இயக்குநரகத்தின் கீழ் 12 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை, பள்ளிகளின் விளம்பர பலகைகளில் வெளியிடுவதை கட்டாயமாக்கும்படி, தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் மே 25ம் தேதி உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், ஜூன் 5ம் தேதிக்குள் கட்டண விவரங்களை விளம்பரப் பலகையில் வெளியிடும்படி, அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகள் இயக்குநர் ஜூன் 1ம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்தார்.

இந்நிலையில், மாநில தகவல் ஆணைய உத்தரவு மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் பிறப்பித்த அறிவிப்பையும் ரத்து செய்யக் கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கட்டண விவரங்களை வெளியிட மறுக்க முடியாது என்றும், தகவல் உரிமைச் சட்டத்தில் விலக்களிக்கும் பிரிவில் கூட, பொது நலன் சார்ந்த விவரங்களை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளது என்றும், கல்விக் கட்டணம் என்பது கருப்புப் பணம் அல்ல என்பதால், அதன் விவரங்களை சொல்லலாமே என உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில், தனியார் பள்ளிகளில் 2026-27ஆம் கல்வி ஆண்டில் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டண விவரங்களைக் கல்விக் கட்டண நிர்ணயக்குழு tnfeecommittee.com என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் மாவட்ட வாரியாக ஒவ்வொரு பள்ளியும் எந்தெந்த வகுப்பிற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கும் என்ற தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல். 2027-28ஆம் கல்வியாண்டியில் வசூலிக்க வேண்டிய கட்டணங்களும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2025-26ஆம் கல்வியாண்டில் வசூலித்த கட்டண விவரங்களும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை முறைப்படுத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியன் தலைமையில் செயல்பட்டுவரும் கல்விக் கட்டண நிர்ணயக்குழு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: