வால்பாறை: சூறாவளி காற்றுடன் விடிய விடிய பெய்த மழையால் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்றிரவு முதல் விடிய விடிய பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக, வால்பாறை-பொள்ளாச்சி மலைச்சாலையில் உள்ள வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் இன்று அதிகாலை சாலையோரத்தில் இருந்த மரம் வேருடன் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இன்று காலை சுமார் 5 மணி அளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு புறப்பட்ட அரசு பேருந்துகள், பால் விநியோக வாகனங்கள் மற்றும் தினசரி நாளிதழ்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் சாலையிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தகவலறிந்த சம்பந்தப்பட்ட துறையினர் மற்றும் உள்ளூர் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் மலைச்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து வாகனங்கள் படிப்படியாக இயக்கப்பட்டது. மழை நீடித்து வருவதால், வால்பாறை- பொள்ளாச்சி மலைச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
