ஈரோடு: பெரும்பள்ளம் ஓடையில் நுரையுடன் கூடிய சாயக்கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கழிவை வெளியேற்றும் ஆலைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மெத்தனப்போக்கு காட்டி வருவது விவசாயிகள், சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு அடுத்த வில்லரசம்பட்டி, திண்டல், பி.பெ.அக்ரஹாரம், கங்காபுரம், சூரம்பட்டி வலசு, வெட்டுக்காட்டு வலசு, வீரப்பன்சத்திரம் உள்பட பல்வேறு இடங்களில் சாய சலவை, பிளீச்சிங் ஆலைகள் என நூற்றுக்கணக்கான ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சில ஆலைகள் கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் நீர்நிலைகளில் திறந்து விடுகின்றன.
இதனால் நீர்நிலைகளில் மாசு ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, சாய ஆலை உரிமையாளர், தங்களின் ஆலை கழிவுநீரை, பெரும்பள்ளம் ஓடையில் திறந்து விட்டுள்ளனர். இதனால் நிலத்தடிநீர் ஆதாரம் பாதித்துள்ளதாகவும், நஞ்சை- ஊத்துக்குளி வாய்க்கால் பாசனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஈரோடு மாநகரில் பழமையான மழைநீர் வடிகாலாக பெரும்பள்ளம் ஓடை திகழ்கிறது. திண்டலில் இருந்து காவிரி ஆறு வரை, 12 கி.மீ., மாநகரின் குறுக்கே ஓடுகிறது. இந்த ஓடையில் கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீரும், மழைநீரும் கலந்து காவிரி ஆற்றில் கலக்கிறது.
நன்னீராக ஓடிய பெரும்பள்ளம் ஓடை, தற்போது சாய பட்டறைகளின் சாயக்கழிவு நீர் செல்லும் ஓடையாக மாறி விட்டது. குறிப்பாக மழை காலத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடும்போது, சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு, சலவை ஆலை கழிவு ஓடையில் திறக்கப்படுகிறது. கடந்த வாரம் பெய்த மழை காரணமாக, பெரும்பள்ளம் ஓடையில் அதிகமாக தண்ணீர் சென்றதால் சாயக்கழிவு நீரை வெளியேற்றுவது வெளியே தெரியாமல் இருந்தது. தற்போது மழைப்பொழிவு இல்லாததால் சாய சலவை பிரிண்டிங் மற்றும் தோல் ஆலைகளின் கழிவுநீரை இரவு, பகல் என இல்லாமல் வெளியேற்றி வருகின்றனர்.
இதனால் பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் நுரையுடன் கூடிய சாயக்கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதுபோன்று கழிவை வெளியேற்றும் ஆலைகள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. அவ்வப்போது மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வது கண்துடைப்பே தவிர, வெறொன்றுமில்லை. எனவே, சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை நீர் நிலைகளில் திறந்துவிடும் ஆலைகளை கண்டறிந்து அந்த ஆலைகளின் மீது மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
