நிதி முறைகேட்டில் சிக்கிய எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.2,000 கோடி முதலீடு செய்த எல்ஐசி-க்கு பலத்த அடி: இல்லாத வருவாயை ரூ.15.15 லட்சம் கோடி என்று காட்டியது அம்பலம்

 

மும்பை: ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ள எல்ஐசி-யின் பல கோடி ரூபாய் முதலீடு நிதி முறைகேடு புகார்களால் தற்போது பெரும் கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையிலான நிதியாண்டுகளில், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது வருவாயை 15.15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மிகைப்படுத்திக் காட்டியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ‘செபி’ நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்நிறுவனத்தின் வெளிநாட்டு துணை நிறுவனங்கள் மற்றும் சுவிஸ் தங்க சுத்திகரிப்பு பிரிவான ‘வால்காம்பி’ மூலம் பெறப்பட்டதாக கூறப்பட்ட வருவாயில் 99.8 சதவீதத்தை முறையான ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்த முடியவில்லை.

இதன் காரணமாக கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அந்நிறுவனம் கொண்டு வந்த 23 பங்குதாரர் தீர்மானங்களில் 17 தீர்மானங்களுக்கு எதிராக எல்ஐசி வாக்களித்து, தனது கவலையை ஏற்கனவே பதிவு செய்திருந்தது. தற்போது இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள செபி, நிதி முறைகேடு மற்றும் விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்திற்காக நிறுவனத்தின் சிஎம்டி ராஜேஷ் மேத்தா பங்குகளை வர்த்தகம் செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, பங்குச்சந்தையில் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன பங்குகள் 5 சதவீத கீழ்நிலை சுற்றை எட்டி, ஒரு பங்கின் விலை 98.70 ரூபாய் என்ற சரிவை சந்தித்தது.

கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனங்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யாமல் தவிர்த்து வந்த நிலையில், எல்ஐசி மட்டும் தனது பங்குகளை 5 மடங்கு அதிகரித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்ஐசி நிறுவனம் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் 10.80 சதவீத பங்குகளை வைத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் அந்நிறுவன பங்குகளின் மதிப்பு 90 சதவீதம் சரிந்ததால், எல்ஐசி செய்திருந்த சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு தற்போது 340 கோடி ரூபாயாக குறைந்து நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம், ‘எங்கள் நிறுவனம் முற்றிலும் கடன் இல்லாதது.

செபி அமைப்பு எங்கள் கணக்கியல் முறையை தவறாக புரிந்து கொண்டது’ என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, இத்தகைய கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிறுவனத்தில் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி, ஏன் தொடர்ந்து முதலீடு செய்தது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

Related Stories: