பிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி!

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டு பொதுமக்கள் மிகவும் அச்சத்திற்குள்ளக்கியுள்ளனர். அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவானது. இதையடுத்து மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவானது.

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டனாவோ (Mindanao) பிராந்தியத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவாகியுள்ள இந்த பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட சொத்து மற்றும் உயிர்ச் சேதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இன்று காலை இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் புரியஸ் பகுதிக்கு மேற்கே-தென்மேற்கே சுமார் 24.7 கிலோமீட்டர் (15.3 மைல்) தொலைவிலும், பூமிக்கு அடியில் 35 கிலோமீட்டர் (22 மைல்) ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவின் கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையடுத்து பிலிப்பைன்ஸில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இம்முறை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவானது. பிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டு பொதுமக்கள் மிகவும் அச்சத்திற்குள்ளக்கியுள்ளனர்.

உலகில் இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் பிலிப்பைன்ஸும் ஒன்றாகும். பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள நில அதிர்வு மண்டலமான “நெருப்பு வளையத்தில்” இந்த நாடு அமைந்துள்ளதால், இங்கு அடிக்கடி நிலநடுக்கங்களும் எரிமலை வெடிப்புகளும் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இது தவிர, புவியியல் காரணங்களால் ஆண்டுதோறும் சராசரியாக 20 சூறாவளிகள் மற்றும் வெப்பமண்டல புயல்களாலும் இந்த நாடு கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: