திராவிட மாடல் அரசின் நிர்வாக நடவடிக்கைகளைத் தன் சாதனை என திரிக்க முற்படுகிறது தவெக: திமுக விளக்கம்

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB/TNPDCL) 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (AEE) வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வு குறித்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, செய்தி மக்கள் தொடர்புத் துறை (DIPR) மூலமாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு (எண்: 189, நாள்: 06.06.2026) முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது மற்றும் முந்தைய கழக அரசின் நடவடிக்கைகளை இருட்டடிப்பு செய்யும் மலிவான அரசியல் செயலாகும் என திமுக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்; “பொதுவெளியில் தவறான தகவல்களைப் பரப்பும் தவெக அரசின் இச்செயலைத் திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மக்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் உண்மையை உணர்த்தும் வகையில் கீழ்க்காணும் சட்டபூர்வமான மற்றும் நிர்வாக ரீதியான உண்மைகள் முன்வைக்கப்படுகின்றன:

1. கழக அரசு தொடங்கி வைத்த பதவி உயர்வு நடவடிக்கைகள்:
2000-2001 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த Seniority தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த 11.03.2026 அன்று (SLP Civil Appeal Nos. 862/2026) இறுதித் தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு வந்த மறுகணமே, அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக அரசு, 12.03.2026 அன்றே 416 உதவி செயற்பொறியாளர்களுக்கான (AEE) பதவி உயர்வுப் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது (Letter No. 017569/G1/G1(1)/2026). முந்தைய கழக அரசால் முழுமையாக முடிக்கப்பட்ட கோப்பில், வழக்கமான நிர்வாக நடைமுறைகளின்படி தற்போது வெளியாகி இருக்கும் ஆணையை, “தங்கள் அரசின் புதிய சாதனை” என உரிமை கொண்டாடுவது அப்பட்டமான பித்தலாட்டம்.

2. 416 பேர் பட்டியல் எப்படி 379 ஆகச் சுருங்கியது?
கழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வப் பட்டியலில் தகுதி வாய்ந்த அதிகாரிகளின் எண்ணிக்கை 416. ஆனால், தவெக அரசு வெளியிட்ட DIPR செய்திக்குறிப்பில், “தகுதியுடைய 379 பொறியாளர்களில் 300 பேருக்கு ஆணை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் தகுதியுடன் இருந்த அதிகாரிகளில் 37 பேர் விடுபட்டது எப்படி? அந்த 37 அதிகாரிகளின் உரிமையை இந்த அரசு ஏன் பறித்தது? மேலும், தகுதிவாய்ந்த பட்டியலில் இருந்து வெறும் 300 பேருக்கு மட்டும் ஆணை வழங்கிவிட்டு, எஞ்சியவர்களை நிராகரித்தது எந்த வகையான ‘ஊழலற்ற, வெளிப்படையான’ நிர்வாகம்? இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் உரிய சட்ட விளக்கத்தை அளிக்க வேண்டும்.

3. “வரலாற்றில் முதல் முறை” என்ற மோசடியான புள்ளிவிவரம்:
“மின்வாரிய வரலாற்றிலேயே முதல் முறையாக 300 பேருக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு” என DIPR மூலமாகப் பொய்ப் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. கழக ஆட்சியில், 28.11.2024 அன்று 749 தொழில்நுட்ப உதவியாளர்களுக்கும் (//Memo.No.027722/G4/G41/2024-7), ஆகஸ்ட் 2025-ல் 616 உதவி பொறியாளர்களுக்கும் பதவி உயர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதே மின்வாரியத்தின் வரலாறு. முறையான தரவுகளைச் சரிபார்க்காமல், 300 பேருக்கு ஆணை வழங்கிவிட்டு அதையே வரலாற்றுச் சாதனை என அரசு இயந்திரத்தின் மூலம் தம்பட்டம் அடிப்பது வெட்கக்கேடானது.

முடிவாக, அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வத் துறையான DIPRஐ தங்களின் கட்சி ஐடி விங் போலப் பயன்படுத்தி, முந்தைய ஆட்சியின் திட்டங்களுக்கு “ஸ்டிக்கர்” ஒட்டும் மலிவான அரசியலைத் தவெக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

விடுபட்ட தகுதிவாய்ந்த அனைத்துப் பொறியாளர்களுக்கும் உடனடியாகப் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் எனத் திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகிறது.

உண்மைகளை மறைத்து, பொய்களை முலாம் பூசி வெளியிட்டால், அதனைத் தகர்த்தெறிந்து மக்கள் மன்றத்தில் உடன்பிறப்புகள் துணையோடு தோலுரித்துக் காட்டுவோம்!

Related Stories: