திருவெண்ணெய்நல்லூர் அருகே பரிதாபம் மொட்டை மாடியில் நடைபயிற்சி சென்ற கர்ப்பிணி பெண் தவறி விழுந்து பலி

திருவெண்ணெய்நல்லூர், ஜூன் 8: திருவெண்ணெய்நல்லூர் அருகே நடைபயிற்சியின்போது மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை கிராமத்தை சேர்ந்த வீரப்பன் மகள் யுவஸ்ரீ (29). இவருக்கும், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மாமந்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜதுரை என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

ராஜதுரை உளுந்தூர்பேட்டை ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். யுவஸ்ரீ கருவுற்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வளைகாப்பு செய்து பெரியசெவலையில் உள்ள தாய் வீட்டில் பிரசவத்துக்காக வந்து தங்கியிருந்தார். நேற்று முன்தினம் மாலை அவரது தாய் வீட்டில் உள்ள மொட்டை மாடியில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக யுவஸ்ரீ தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். ஆபத்தான நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி தாயும், சேயும் உயிரிழந்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் அழகிரி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணி கீழே விழுந்து தாயும், சேயும் உயிரிழந்த சம்பவம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Stories: