பொதுமக்கள் பெரும் பீதி மண்ணச்சநல்லூர் பகுதியில் பரவும் மூளை காய்ச்சல்?

சமயபுரம், ஜூன் 8: தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் குழந்தைகளிடம் காய்ச்சல், தொண்டை வலி போன்ற பாதிப்புகள் சற்று அதிகரித்து வருவதால், அது மூளை காய்ச்சலாக இருக்குமோ என்கிற அச்சம், பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மூளைக்காய்ச்சல் என்பது மூளையையும், முதுகுத் தண்டுவடத்தையும் சுற்றியுள்ள திசுக்களில் ஏற்படும் வீக்கமாகும். இதன் ஆரம்ப அறிகுறிகள் சாதாரண சளி, காய்ச்சல் போல் தோன்றினாலும் அது நாட்களில் மிக வேகமாக நரம்பு மண்டலத்தை தீவிரமாக சேதமடைய செய்யும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த காய்ச்சலுக்கு முக்கிய அறிகுறிகள், திடீரென ஏற்படும் கடுமையான அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் பிடிப்பான கழுத்து வலி, குமட்டல் மற்றும் வாந்தி மற்றும் தீவிர சோர்வு, அதிக மூட்டு வலி என அறிகுறிகள் தென்படும். அதனைத் தொடர்ந்து நரம்பு மண்டல பாதிக்கப்பட்டு உடனடியாக உணர்விழந்த முழு மயக்க நிலை செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் மண்ணச்சநல்லூர் பகுதியில் திருமணமான ஒரு இளம் பட்டதாரி பெண் மற்றும் திருப்பைஞ்ஞீலி கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞர் இதுபோன்ற காய்ச்சல் ஏற்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பிறகு அந்த இளைஞர் உயிரிழந்து விட்டார். பாதிப்பில் சிக்கிய அந்த இளம்பெண் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.

லட்சக்கணக்கில் செலவழித்தும் இன்னும் அந்த பெண்ணுக்கு முழுமையாக குணமடையவில்லை. இந்த செய்தி அறிந்த மண்ணச்சநல்லூர் பகுதி மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். மேலும், இதுபோன்ற காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவ நிபுணர்களை அணுகி பரிசோதனை செய்வது மிக அவசியமாகும். எனவே மர்ம காய்ச்சல் (அ) மூளை காய்ச்சலோ இதை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே மாவட்ட கலெக்டர் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்ணச்சநல்லூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: