தேர்தலில் வென்றவுடன் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது ஏற்கமுடியாது: அன்புமணி எதிர்ப்பு

சேத்துப்பட்டு, ஜூன் 8: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த பொத்தரை கிராமத்தில் பாமக தலைவர் அன்புமணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் உரையில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான தமிழக அரசின் கொள்கை முடிவு அறிவிக்கப்பட வேண்டும்.

தென்பெண்ணையாற்றின் நீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்க செய்யாறு மற்றும் பாலாற்றை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேலும், நந்தன் கால்வாய்க்காக தென்பெண்ணையாற்றில் இருந்து தனிக் கால்வாய் அமைக்க வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாராஷ்டிர மாநிலத்தைப் போன்று தமிழகத்திலும் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த காவல்துறை போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுகவால் அடையாளம் காணப்பட்டு அமைச்சர்களாக உயர்த்தப்பட்டவர்கள், ஒரு தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டோம் என்ற எண்ணத்தில் வெற்றி பெற்ற கட்சிக்கு தாவுவது அந்தக் கட்சிக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் செய்கின்ற துரோகமாகும். தேர்தல் வரும், போகும். வெற்றி பெற்றவுடன் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது, ராஜினாமா செய்ய வைப்பது, கட்சியை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு கூறினார்.

Related Stories: