திருப்பத்தூர் நகராட்சி கூட்டத்தில் வாக்குவாதம்; நகராட்சி ஆணையாளரை கண்டித்து தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு

திருப்பத்தூர், ஜூன் 6: அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் நடந்து கொள்வதாக கூறி திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளரை கண்டித்து அதன் தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர். திருப்பத்தூர் நகராட்சி கூட்டம் அதன் தலைவர் சங்கீதா வெங்கடேசன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் 36 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்திற்கு கமிஷனர் சாந்தி வர தாமதம் ஆனதாக தெரிகிறது. அப்போது நகராட்சி கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து, `எங்கள் பகுதிக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்துதராமல் அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் நடந்து வருகிறார்கள்’ என கோஷமிட்டு நகரமன்ற கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி வெளிநடப்பு செய்தனர். அவருடன் சேர்ந்து நகராட்சி தலைவரும் வெளிநடப்பு செய்தார்.

அப்போது கமிஷனர் சாந்தி, அவைக்குள் வந்தார். இருப்பினும் அவர் வெளிநடப்பு செய்த கவுன்சிலர்களிடம் எதுவும் பேசாமல் தனது இருக்கையில் சென்று அமர்ந்தார். இதனை அவையின் வெளியே கண்ட நகர மன்ற தலைவர் சங்கீதா, `நாங்க வெளிநடப்பு செய்து வெளியே நிற்கிறோம். என்ன, ஏது? என ஒருவார்த்தைக்கூட கேட்காமல் நேராக சென்று கமிஷனர் தனது சீட்டில் அமர்ந்து கொண்டாரே? என பேசினார்.அப்போது மற்றொரு கவுன்சிலர், ‘நாம் சொல்லும் வேலைக்கு அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று குற்றம்சாட்டினார். அதன்பின்னர் வெளிநடப்பு செய்தவர்கள் அவைக்குள் வந்தனர். அப்போது கமிஷனர் சாந்தியை பார்த்து கவுன்சிலர்கள் அடிப்படை வசதிகள் மற்றும் திட்டப்பணிகள் குறித்து சரமாரி கேள்வி எழுப்பினர். ஆனால் கமிஷனர் சாந்தி பதிலளிக்காமல் மவுனமாக இருந்தார்.

தொடர்ந்து அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. அப்போது கமிஷனர் சாந்தி, `தயவு செய்து என்னை விட்டுடுங்க, எனக்கு எந்த வேலையும் தெரியாது’ எனக்கூறினார். இதனால் நகராட்சி தலைவர் உட்பட கவுன்சிலர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே வெளிநடப்பு செய்த 36 கவுன்சிலர்களில் 19 கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றதால் மெஜாரிட்டி இல்லாமல் நகர மன்ற கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

Related Stories: