ராணிப்பேட்டை, ஜூன் 4: கோடைவிடுமுறை முடிந்து இன்று பள்ளிள் திறக்கப்பட உள்ள நிலையில் அங்கு மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள் முறையாக நடந்ததா? என கலெக்டர் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோடை விடுமுறை முடித்து 2026-27ம் கல்வி ஆண்டு பள்ளி வகுப்புகள் இன்று திறப்பதையொட்டி பள்ளிகள், உணவு கூடங்கள் முறையாக உள்ளதா? என்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ப்ரியா தலைமையில் நேற்று நடந்தது. அப்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் விடுமுறைக்கு பிறகு நாளை (இன்று) வியாழக்கிழமை திறக்கப்படுகிறது. எனவே மாவட்டத்தில் உள்ள பள்ளி வகுப்பறைகள், வளாகங்கள் அனைத்தும் முறையாக தூய்மை செய்யப்பட்டிருக்கவேண்டும். இதனை அனைத்து தலைமை ஆசிரியர்களும் உறுதி செய்யவேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை கேட்டுக்கொண்டார்.
மேலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் மதிய சத்துணவு திட்டம் சமையல் செய்யும் சமையலறையில் முறையாக தூய்மை செய்யப்பட்டு சமையலுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து பாத்திரங்களும் தூய்மை செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும். சமையலுக்கு பயன்படுத்தப்படும் உணவுப்பொருட்களில் ஏற்கனவே வினியோகிக்கப்பட்ட பழைய பொருட்கள் காலாவதியாகியிருந்தால் அதனை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்ப வேண்டும். மேலும் தேவைப்படும் பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. அவை தரமாக உள்ளதா? என சமையல் செய்பவர்கள் உறுதி செய்து சமைக்கும் பணிகளை மேற்கொள்ளவேண்டும். சமையல் கூடம் முழுவதும் சுத்தமாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். சமையல் பாத்திரங்கள், குழந்தைகள் சாப்பிடும் பாத்திரங்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். சமையல் செய்பவர்கள், உதவியாளர்கள் இவைகளை முன்கூட்டியே செய்து முடித்திருக்க வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இதனை பின்பற்றுவதை தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
மேலும் திட்ட இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நேர்முக உதவியாளர் சத்துணவு, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மேலாளர்கள் அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு உணவுகள் சமைப்பதையும், வழங்குவதையும் நேரடி கள ஆய்வு செய்து அனைத்து பள்ளி மாணவ, மாணவிகள் சத்தான உணவுகளை பள்ளிகளில் சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் செந்தில்குமரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மோகனா, நேர்முக உதவியாளர் (சத்துணவு) சுப்பிரமணியன், மண்டல மேலாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஏகாம்பரம், துணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கம் சிவமணி மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ப்ரியா தலைமையில் நடைபெற்றது. இதில் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை செல்வராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
