நகை திருட்டில் தேடப்பட்டு வந்த ஒருவன் கைது

அணைக்கட்டு, ஜூன் 4: அணைக்கட்டு அருகே மாஜி ராணுவ வீரர் வீட்டில் நகை திருட்டில் தேடப்பட்டு வந்த ஒருவனை போலீசார் கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.
அணைக்கட்டு அடுத்த கவுதமபுரத்தைச் சேர்ந்தவர் குமார் முன்னாள் ராணுவ வீரர். இவர் கடந்த மாதம் 29ம் தேதி குடும்பத்துடன் கோயில் திருவிழாவிற்காக வீட்டை பூட்டிவிட்டு ஆம்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். 30ம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வெளிப்புற இரும்பு கேட், வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த 13 சவரன் நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இது தொடர்பாக அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் ஒருவன் ராணிப்பேட்டை பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று அங்கு சென்று அவனை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா வாணாபாடி கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார்(26) என்பதும், இவனும் அந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து உதயகுமாரை கைது செய்த போலீசார் முக்கிய குற்றவாளி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘உதயகுமாரும் அவரது நண்பரும் சேர்ந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் உள்ளது, இவர்கள் திட்டமிட்டு பூட்டியிருக்கும் வீடுகளை பார்த்து இதுபோன்ற நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். சம்பவத்தன்று குமார் வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு இருவரும் சேர்ந்து நகையை திருடி உள்ளனர்.

இதில் ஏ1 முதல் குற்றவாளியான இவனது நண்பன் முழுவதுமாக அந்த நகையை வாங்கிக்கொண்டு 3 நாட்களில் அந்த நகையை விற்று உனக்கு சேர வேண்டிய பணத்தை தருவதாக இவனிடம் கூறிவிட்டு தலைமறைவாகியுள்ளான். நகை வைத்துள்ள இவனது நண்பனான அக்யூஸ்ட் ஏ 1ஐ தீவிரமாக தேடி வருகிறோம்’ என்றனர்.

Related Stories: