வாலாஜா, ஜூன் 4: வாலாஜா அருகே தாயின் கண்முன் கல்குவாரி குட்டையில் மூழ்கி பிளஸ் 2 மாணவி பலியானார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி அமுதா. தம்பதிக்கு 2 மகள்கள். இவர்களில் மூத்த மகள் யாமினி (18), அங்குள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை யாமினி தனது தாயார் அமுதாவுடன் அங்குள்ள கல்குவாரி குட்டையில் துணி துவைக்க சென்றார். அப்போது தாய்க்கு துணையாக துணி துவைத்துவிட்டு அவர் நீச்சல் பழக முயன்றதாக தெரிகிறது. இதில் எதிர்பாராத விதமாக அவர் நீரில் மூழ்கினார். இதனைக்கண்ட அவரது தாய் அமுதா கூச்சலிட்டார். சத்தம் கேட்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய யாமினி போராடி மீட்டனர். ஆனால் அவர் ஏற்கனவே நீரில் மூழ்கி இறந்தது தெரிந்தது. இதைக்கண்ட அவரது தாய் கதறி அழுதார். இதுகுறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
