சென்னை: பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் இருந்து தலை இல்லாத ஆண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர் ரயில் நிலையத்தில் 4வது பிளாட்பார்மில் சந்தேகம் அளிக்கும் வகையில் சூட்கேஸ் கிடந்துள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் பெரம்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கேட்பாரற்று கிடந்த சூட்கேசை திறந்து பார்த்ததில் 35 வயது மதிக்கதக்க தலை இல்லாத ஆண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்தில் ரயில்வே எஸ்.பி. ஆய்வு செய்து வருகின்றனர். இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்டு சூட்கேசில் உடலை வைத்து சென்ற கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
