* சுற்றுச்சூழல் ஆர்வலர்களின்கனவு நனவாவது எப்போது?
* புவிமகள் புத்தாடை புனைவாளா?
வளர்ந்து வரும் நாகரிக உலகில் ‘நெகிழி’ எனும் பிளாஸ்டிக் பொருட்கள் நமது வாழ்க்கைக்கு பெரும் மதிப்பை சேர்த்துள்ளது. ஆனால் நெகிழிகள் சுற்றுச்சூழலில் குவிந்து, உயிரினங்கள், வாழ்விடங்கள் மற்றும் மனித ஆரோக்கியத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஓர் உலகளாவிய நெருக்கடியாக உள்ளது. இது காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்புடன் தொடர்புடைய ஒரு முக்கிய சுற்றுச்சூழல் சவால். இதற்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழி பைகள், பாட்டில்கள், பொட்டல பொருட்கள், மோசமான கழிவு மேலாண்மை மற்றும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாதது முக்கிய காரணங்கள் ஆகும். இமயமலை சிகரம் முதல் கடலின் ஆழம் வரை நெகிழிகள் பரவியுள்ளன.
வரும் 2050ல் நமது கடல்களில் மீன்களைவிட, நெகிழிகள் அதிகமாகி விடும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஒரு நெகிழி பையின் சராசரி பயன்பாட்டு நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் நெகிழிகள் சிதைவதற்கு 1,000 ஆண்டுகளுக்கும் மேலாகலாம். இவை இயற்கைக்கு கேடு விளைவிப்பவை. சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவை. நெகிழி மாசுபாடு வாழ்விடங்கள் மற்றும் இயற்கை செயல்முறைகளை மாற்றியமைத்து, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப, சூழல் அமைப்புகளின் தகவமைக்கும் திறனை வெகுவாக குறைக்கிறது. இது மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரம், உணவு உற்பத்தி திறன் மற்றும் சமூக நல்வாழ்வை நேரடியாக பாதிக்கிறது.
கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் நெகிழி சார்ந்த பொருட்களே காணப்படுகின்றன. சிறுவர் உபயோகிக்கும் விளையாட்டு பொருட்கள் முதல் வாகன உதிரிப்பாகங்கள் வரை நெகிழி இல்லாத பொருளே இல்லை எனலாம். விலை குறைவு, எடைகுறைவு போன்ற காரணங்களால் மக்கள் இதனை அதிகம் உபயோகிக்கின்றனர். நெகிழி பாட்டில்கள், பேக்கேஜிங் பைகள், தொழிற்சாலை லைனர்கள், சுருள்கள், வணிக குப்பைகள், மளிகை பொருட்கள் அடைக்கப்பட்ட பைகள் போன்றவற்றை உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இப்பொருட்களை மீண்டும் மறுசுழற்சி செய்தல் பயனற்றதாக உள்ளது. தற்போது உற்பத்தி செய்யப்படும் நெகிழிகளில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
மக்கள் பண்டைய காலங்களில் வாழை இலையில் சாப்பிடுவதும், துணிப்பைகளில் தாம்பூல பைகள் தருவதும் வழக்கமாக கொண்டிருந்தனர். பித்தளை, சில்வர் போன்றவற்றில் தண்ணீர் சேமித்தல், நீர் அருந்துதல், உணவு உண்ணுதல் போன்ற முறைகளை கையாண்டனர். ஆனால் தற்போது நெகிழி மோகத்தால், இயற்கை வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் இலைகள், டம்ளர்கள், கரண்டிகள் போன்ற எண்ணற்ற வடிவில் செயற்கையை நாடி செல்கின்றனர். நெகிழியால் உருவாகும் பொருட்கள் அனைத்தும் வேதிமுறையில் தயாரிக்கப்பட்டவை. இந்த நெகிழியில் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ உணவுப்பொருட்களை வைத்தாலோ அல்லது வெகுநாட்களாக இருந்தாலோ வேதிவினை புரிந்து, நாம் பயன்படுத்தும்போது உடலில் தேவையற்ற கொடிய நச்சு ரசாயன பொருட்கள் சேர்ந்து, பல நோய்களுக்கு காரணமாகின்றன.
கேன்சர் போன்ற வியாதிகளை உருவாக்கும் தன்மையும் நெகிழியில் உள்ளது. மேலும் இது வளரும் நமது சந்ததியினரையும் வெகுவாக பாதிக்கிறது. பயன்பாட்டை குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி கொள்கைகளை கடைப்பிடித்தல், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளுக்கு தடை விதித்தல் மற்றும் நிலையான மாற்று பொருட்களை பயன்படுத்துதல் போன்றவை, நெகிழியின் சுற்றுச்சூழல் சவாலின் தீவிரத்தில் இருந்து நம்மை ஓரளவாவது பாதுகாக்கும். தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி முதல் 14 வகையான நெகிழி பொருட்களுக்கு தடை விதித்து அரசு அரசாணை பிறப்பித்தது. ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழியால் ஏற்படும் மாசுபாட்டை தடுக்கவும், பாரம்பரிய துணிப்பைகளை பயன்படுத்தவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம் கொண்டு வந்தார்.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் நெகிழி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு ‘மஞ்சள் பை’ வழங்கப்படுகிறது. நெகிழி பொருட்களுக்கு அரசு விதித்த தடையால், அவற்றின் புழக்கம் ஓரளவுக்கு குறைந்தது. ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்திட முன்வரவில்லை. தற்போது அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததால், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உணவுகள், தின்பண்டங்கள் போன்றவற்றை நெகிழி பைகளில் வாங்கி செல்கின்றனர். இதுபோல மது அருந்துவோரும் தங்களுக்கு தேவைவயான பொருட்களை கொண்டு செல்ல நெகிழி பைகளையே பயன்படுத்துகின்றனர். ஓட்டல்களிலும் சூடான டீ, சாம்பார் உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களையும் பொட்டலம் செய்ய நெகிழிகளையே பயன்படுத்துகின்றனர். இதனால் குமரி மாவட்டத்தில் மீண்டும் நெகிழி பயன்பாடு அதிகரித்துள்ளது.
அனைத்து வணிகர்கள், பொதுமக்கள் தங்களுக்கென நெகிழி தவிர்ப்பு முறைகளை கையாளுதல் வேண்டும். நெகிழியை தவிர்க்கும்போது விவசாய நிலம், மணல், நீர்நிலைகள், விலங்கினங்கள், சுற்றுச்சூழல் மேம்பாடு அடைதல், தட்பவெப்ப நிலையை சமன்படுத்துதல் போன்றவை மூலம் நம் நாடு தூய்மையாகவும், பசுமையாகவும் இருக்க உதவும். ‘நெகிழி இல்லாத நாடாக பாரதத்தை உருவாக்குவோம்’ என ஒவ்வொரு குடிமகனும் தனக்கொரு உறுதிமொழியை எடுத்து கொள்ள வேண்டும். தற்போது நாடு முழுவதும் நெகிழி பயன்பாடு தடை அமலுக்கு வந்துள்ளது. நெகிழியை பயன்படுத்தும் மக்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகள், உற்பத்தி செய்யும் நபர்கள் மீது எடுத்தால் ‘நெகிழி இல்லா இந்தியா’ என்ற நெடிய இலக்கு எளிதாகும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
மாற்றுப்பொருட்களை பயன்படுத்தலாமே!?!
காய்கறிகள், பால், துணிக்கடைகள், மருந்து கடைகள், மின்னணு சாதனங்கள், மளிகை பொருட்கள், தேநீர் கடைகள், வாகன பொருட்கள், உணவு பொருட்கள் போன்ற எண்ணற்ற முறையில் நெகிழியின் பயன்பாடு மிகமிக அதிகமாக உள்ளது. ஆனால் இந்த நெகிழியின் நன்மை, தீமைக பற்றி யாரும் சிந்திப்பது இல்லை. குறைந்த விலையில் கேரிபேக்குகள் கிடைப்பதாலும், வசதியாக இருப்பதாலும் மக்கள் நெகிழிகளை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதை தவிர்த்து நெகிழி பொருட்களுக்கு மாற்றாக துணிப்பைகள், துருப்பிடிக்காத எஃகு, தாவர இலைகள், பனை ஓலைகள், கண்ணாடி குவளைகள், தரமான காகிதம் உள்ளிட்ட, சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாத பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
எவர்சில்வர் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்துங்கள். குளிர்பானங்களை வாங்கி அருந்தும்போது நெகிழி குழல் உறுஞ்சிகள் (Straw) வாங்காமல் மறுத்து விடுங்கள்! நெகிழி பொதியாத பொருட்களை பார்த்து வாங்கவும். ஓட்டல்களில் பார்சல் வாங்க செல்கிறீர்களா? முன்யோசனையாக வீட்டில் இருந்து தூக்குவாளியை, உரிய பாத்திரங்களை எடுத்து செல்லுங்கள். இது நெகிழி பயன்பாட்டை வெகுவாக குறைப்பதோடு, உங்களின் செலவையும் கணிசமாக குறைக்கும். பொருட்கள் வாங்க கடைத்தெருவுக்கு செல்லும்போது துணிப்பையை உடன் எடுத்து செல்லுங்கள். இவற்றின்மூலம் நெகிழி கழிவுகள் உற்பத்தியாகும் ஒரு பெரிய தொடர் சங்கிலி துண்டிக்கப்படுகிறது.
செல்பி எடுத்து பகிருங்கள்!
உங்களுடன் பணியாற்றும் ஊழியர்கள், நண்பர்கள் கையில் துணிப்பை, உலோக உறிஞ்சிகள் அல்லது நெகிழிக்கு மாற்றான பொருட்களுடன் செல்பி எடுத்து பகிர்வதோடு, மேலும் 5 நண்பர்களுக்கு பகிருமாறு தெரிவிக்கவும். முகநூல், எக்ஸ் உட்பட சமூக வலைத்தள முகப்பு பக்கத்தை நெகிழி ஒழிப்பு பிரசாரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அமைக்கலாம். நண்பர்கள், குடும்பத்தார் மற்றும் உடன் பணிபுரிபவர்களுடன் இணைந்து ஜூன் 2, 3ம் தேதிகளில் நெகிழி குப்பைகளை சேகரித்து, தரம் பிரித்து வைக்கவும். இந்த நிகழ்வை செல்பி எடுத்தும் சமூக ஊடகங்களில் பதிவிடலாம்.
நெகிழி தீமைகள்
* கால்நடைகள், வனவிலங்குகள் வீணாகும் உணவுடன் நெகிழி குப்பைகளை உட்கொள்வதால் உணவுக்குழாய் அடைத்து துன்புறுதல் மற்றும் மரணமடை ஏதுவாகிறது.
* தூக்கி எறியப்படும் நெகிழிகள் மண்ணின் உயிர்வேதியியல் தன்மையை பாதிக்கின்றன.
* குடிநீர், குளிர்பான பாட்டில்கள், ஓட்டல்களில் பார்சலின்போது வழங்கப்படும் டப்பாக்கள், கவர்கள் போன்றவை எக்காலத்திலும் அழியா. மேலும் இவை சாக்கடைகள் போன்ற இடங்களில் அடைத்து, பல இன்னல்களை ஏற்படுத்துகின்றன.
* நம் அன்றாட வாழ்வில் வெளியே வீசப்படும் தரம் பிரிக்காத குப்பைகளால் கொசுக்கள், ஈக்கள் போன்றவை பரவி நோய்களை உருவாகின்றன.
* நெகிழி உறைகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள்உடலுக்கு பல ஊறுகளை விளைவிக்கின்றன.
* நெகிழி பைகளால், கழிவுநீரில் தேக்கம் ஏற்பட்டு சுகாதாரக்கேடு உருவாகிறது.
* நிலத்தில் கிடக்கும் நெகிழி பொருட்கள், மழைநீர் நிலத்துக்குள் செல்வதை தடுத்து விடுகின்றன.
16 ஆண்டுகளுக்கு முன்பே…
குமரி மாவட்டத்தில் கடந்த 2010ம் ஆண்டு முதல் நெகிழி என்பது தடை செய்யப்பட்டது. அப்போதைய கலெக்டர் ராஜேந்திர ரத்னுவால் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த தடை அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் இந்த சட்டம் தமிழகத்தில் முதல்முறையாக முழுவீச்சில் அமலுக்கு வந்தது. நீண்ட நெடிய முயற்சிக்கு பின் நெகிழி இல்லாத பகுதியாக, சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி உருவெடுத்ததாக நம்பப்பட்டது. கன்னியாகுமரியை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் என அனைத்து பகுதிகளிலும் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசும் நெகிழி பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டு, படிப்படியாக அமல்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக குமரி மாவட்டம் நெகிழி இல்லா மாவட்டமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல பகுதிகளில் தடையை மீறி நெகிழி பொருட்களின் விற்பனை, பயன்பாடு இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. பொதுமக்களும் நெகிழி குப்பைகளால் ஏற்படும் ஆபத்தை அறியாமல் அவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அதிகாரிகள் இணைந்து, நெகிழி பொருட்கள் பயன்படுத்துவதை தடைசெய்யும் வகையிலும், அவற்றை விற்பனை செய்வதை தடுக்கும் நோக்கிலும், பல்வேறு சோதனைகள் மேற்கொண்டு, கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.
எரித்தால் ஆபத்து
நெகிழிகள் எரியும்போது டயாக்ஸின்கள், ஃபியூரான்கள், நச்சுத்தன்மையுள்ள பிளாஸ்டிசைசர்கள் பிஸ்பெனால் ஏ, ஹைட்ரோகுளோரிக் அமிலம் போன்ற நச்சு ரசாயனங்கள் காற்றில் கலக்கின்றன. இவற்றை சுவாசிப்பதால் புற்றுநோய், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நாள்பட்ட சுவாச நோய்கள் ஏற்படும். மேலும் மனிதர்களின் நாளமில்லா சுரப்பி மண்டலம், நரம்பு வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க செயல்பாடுகளை சீர்குலைக்கின்றன. புகையில் இருந்து எழும் நுண்துகள்கள், கருப்பு கார்பன் காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. எரியாத நெகிழி சாம்பல் மற்றும் நச்சுக்கள் மண்ணில் கலந்து, நிலத்தடி நீரை நஞ்சாக்குகின்றன. மேலும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் போன்ற பசுமை இல்ல வாயுக்களை அதிகளவில் வெளியேற்றி உலக வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது.
