பெரம்பலூர்,மே 28: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள முன்னாள் முதலமைச்சருமான பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய அரசியல் உள்நோக்கம் கொண்ட சோதனைகளை கண்டித்து, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, மூத்த தலைவர் பிருந்தா கராத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் அசோக் தாவலே, மரியம் தாவலே, விஜு கிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் விக்ரம் சிங், பி.வெங்கட், கிருஷ்ண பிரசாத் உள்ளிட்ட பல தலைவர்களையும், கட்சியினரையும் தோழர்களையும் டெல்லி காவல்துறை தாக்குதல் நடத்தி கைது செய்துள்ளது.
டெல்லி காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்து, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகஸ்டின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ரமேஷ், மாவட்டசெயற்குழு உறுப்பினர் ரெங்கநாதன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எட்வின், கருணாநிதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
