சென்னை: தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் 1973ம் ஆண்டு தொடங்கப்பட்டு, பின்னர் தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, 1988ல் இருந்து சங்கமாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் இக்கல்வி நிலைய ஆட்சிமன்ற குழுவின் தலைவர் ஆவார். இந்த கல்வி நிலையம் தொழிலாளர் மேலாண்மையில் பி.ஏ. மற்றும் எம்.ஏ ஆகியவற்றை நடத்தி வருகிறது.
2001 முதல் முழுநேர மற்றும் பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு நடத்துவதற்கு சென்னை பல்கலைக்கழகம் ஓர் ஆராய்ச்சி நிலையமாக கல்வி நிலையத்தை அங்கீகரித்துள்ளது. மேலும், தொழிலாளர் நிர்வாகத்தில் முதுகலை பட்டயப்படிப்பு (பி.ஜி.டி.எல்.ஏ) ஓராண்டு பகுதி நேரம் (மாலை) மற்றும் தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் என்ற ஓராண்டு பகுதி நேரம் (வார இறுதி நாட்கள் – சனி மற்றும் ஞாயிறு) பட்டய படிப்பும் பணிபுரிவோருக்காக நடத்தி வருகிறது.
இக்கல்வி நிலையத்தால் நடத்தப்படும் படிப்புகள், பயிற்சி வகுப்புகள், ஆராய்ச்சி செயல்பாடுகள், சேர்க்கை தொடர்பான தகவல்கள், அறிவிப்புகள் மற்றும் பிற கல்வி நிலைய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை மாணவர்கள் மற்றம் பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் புதிய (https://tils.tn.gov.in/) இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் நேற்று தொடங்கி வைத்தார்.
