சென்னை: பதிவுத்துறை பணியாளர்கள் மீது பெறப்படும் புகார், லஞ்சப் புகார் மனுக்கள் மீது ரகசிய விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என்று அனைத்து துணைப்பதிவுத் துறைத் தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை ஐஜி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் அதிக புகாருக்குள்ளான துறை என்பது பதிவுத்துறைதான். இதனால் பதிவுத்துறைக்கு செயலாளராக நேர்மையான அதிகாரியான குமரகுருபரன், ஐஜியாக அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், பதிவுத்துறையின் டிஐஜிக்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பதிவுத்துறை பணியாளர்கள் மீது பெறப்படும் புகார், லஞ்சப் புகார் மனுக்களை வகைப்படுத்தி புகார் மனுவின் வகைக்கு ஏற்றாற்போல் புகார் மனுவின் மீது ரகசிய விசாரணை மேற்கொண்டு, புகார் மனு குறித்து ஆதார ஆவணங்கள் மற்றும் வாக்குமூல நகல்களுடன் முழுவிவர விசாரணை அறிக்கையினை பதிவுத்துறைத் தலைவருக்கு சமர்பிக்க வேண்டும்.
புகார் தெரிவிக்கப்படும் பதிவுத்துறை பணியாளரின் பதிவுப்பணி தொடர்பான விவரங்களுடன் விசாரணை அறிக்கை சமர்பிக்குமாறு கோரப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் புகாருக்குட்பட்ட பணியாளரின் குறிப்பிட்ட பணியிடத்தில் தனியரின் செயல்பாடுகள் குறித்த விவரம், பதிவுப்பணியில் அரசுக்கு ஈட்டிய வருவாய் விவரம் (சென்ற ஆண்டு வருவாய் உடன் ஒப்பிட்டு), பதிவு செய்துள்ள ஆவணங்களின் எண்ணிக்கை,
நிலுவை வைக்கப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை, நிலுவையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை, ஆவணம் பதிவான நாளில் திரும்ப வழங்கப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை சதவீதம், இந்திய முத்திரைச்சட்டம் பிரிவு 47A (1)ன் கீழ் அனுப்பப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை/ சதவீதம், தணிக்கை இழப்புகள் வசூல் செய்யப்பட்ட விவரம், பொதுமக்களுக்கு உரிய காலத்திற்குள் வழங்கப்பட்ட வில்லங்கச்சான்றுகளின் எண்ணிக்கை விவரம், காலதாமதம் இருப்பின் அதற்கான காரணம்,
களப்பணி மேற்கொள்ளப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை விவரம் மற்றும் உரிய காலத்திற்குள் களப்பணி மேற்கொள்ளப்பட்டு ஆவணதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விவரம், தனியார் தொடர்பான உள்தணிக்கை இழப்புகள், மாநில கணக்காயர் தணிக்கை இழப்புகள் விவரம், தனியர் மீது நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை விவரங்கள், தனியார் மீதான போலி ஆவணப்பதிவு தொடர்பான புகார் மனுக்களின் விவரங்கள், தனியார் பணிகாலத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினால் விவரங்கள்.
மேற்கொள்ளப்பட்ட திடீராய்வுகளின் விவரங்கள், புகார் மனுக்கள் தொடர்பாக விசாரணை அலுவலர்களான சம்மந்தப்பட்ட துணைப் பதிவுத்துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்டப் பதிவாளர்கள் புகார்கள் குறித்து உரிய விசாரணை செய்து, புகாருக்குட்பட்ட பணியாளர் தொடர்பான மேற்கண்ட அனைத்து விவரங்களுடன் முழுவிபர விசாரணை அறிக்கையினை ஆதார ஆவணங்களுடன் பதிவுத்துறைத்தலைவருக்கு சமர்பிக்கும்படி தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையால் மாநிலம் முழுவதும் உள்ள சார்பதிவாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் புகாருக்குள்ளான அதிகாரிகள் பலர் தற்போது இரு நாட்களுக்கு முன்னர் பணிமாற்ற பட்டியலில் நல்ல பணியிடங்களை பெற்றுள்ளனர். லஞ்ச வேட்டையில் சிக்கிய பலர், பதிவுத்துறை ஐஜி அலுவலகத்திலேயே பணியாற்றுகின்றனர்.
இன்னும் பலர் ஐஜி தற்போது கேட்டுள்ள விபரங்களை கேட்டு வாங்கும் இடத்தில் உள்ளனர். இவர்களை வைத்து ஐஜி எப்படி நடவடிக்கை எடுக்கப்போகிறார்? உண்மையில் சும்மா வேண்டாதவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதற்காகவும், விளம்பரத்திற்காகவும் இதுபோன்ற அறிக்கைகள் அனுப்பப்படுகிறதா என்பது விரைவில் தெரிந்து விடும் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.
