சென்னை: விழுப்புரம் மாவட்டம், அனிச்சன்குப்பத்தில் உள்ள ஈழத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் நகுலேஸ்வரன் என்பவர் மகள் யான்சி (18). இவரது பள்ளி தோழி, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பிதா (18), இவரது பக்கத்து ஊரை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் சென்னை ராமாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், சிறுமியைப் பார்ப்பதற்கு கடந்த மாதம் 19ம் தேதி விழுப்புரத்தில் இருந்து யான்சி வந்துள்ளார்.
யான்சி மற்றும் அவரது தோழி இருவர் உள்பட 6 பெண்கள் கடந்த 29ம் தேதி கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள தவெக நிர்வாகிக்கு சொந்தமான ‘கேட்வே எப்எல்-3’ என்ற ஓட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு டிஜே இசையுடன் கூடிய மதுபாரில் அன்று இரவு 11 மணிக்கு 6 இளம்பெண்களும் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. அங்கு அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பாலகுரு (21), சூளைமேடு பகுதியை சேர்ந்த ஜோஷ்வா (19), நெற்குன்றம் பகுதியை சேர்ந்த கிஷோர் குமார் (19), சுமன் சக்தி வேல் உள்ளிட்ட 7 பேர் ஒன்றாக குடித்துள்ளனர்.
இவர்கள் அப் பெண்களை உல்லாசத்துக்கு அழைத்ததால், இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. பவுன்சர்கள் வந்து விலக்கி விட்டு, அத்தனை பேரையும் வெளியேற்றினர். இதன்பின் யான்சியும் சிறுமியும் கோயம்பேடு மேம்பாலம் வழியே திருமங்கலம் நோக்கி பைக்குகளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த சுமன் சக்திவேல் தரப்பினர் யான்சி மற்றும் சிறுமி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதினர். இதில் யான்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
படுகாயமடைந்த சிறுமி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவர் சுமன் சக்திவேல், பாலகுரு, ஜோஷ்வா, கிஷோர்குமார், விமல், கோமகன், ராகுல் உள்பட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று அதிகாலை 2.20 மணியளவில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இந்த கைது செய்யப்பட்டவர்கள் மீது மீண்டும் ஒரு கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
