புளியந்தோப்பு பின்னி மில்லில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி: 5க்கும் மேற்பட்டோர் படுகாயம்

சென்னை: புளியந்தோப்பு பின்னி மில்லில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பரிதாபமாக பலியான நிலையில், 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புளியந்தோப்பு காவல் நிலையம் எதிரே பின்னி மில் மைதானம் உள்ளது. சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த இடத்தில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு பின்னி மில் இயங்கியது. அதன் பிறகு இந்த இடத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை கட்டுமான நிறுவனங்களுக்கு நிலத்தின் உரிமையாளர்கள் விற்பனை செய்தனர்.

இதையடுத்து, கட்டுமான நிறுவனங்கள் சார்பில் அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. மீதமுள்ள பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் சினிமா படப்பிடிப்பு எடுக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த பகுதியில் ஆம்னி பஸ் பார்க்கிங் மற்றும் குடோன்கள் செயல்பட்டு வருகின்றன. சினிமா படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் கடந்த சில நாட்களாக திரைப்பட நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகும் கில்லர் என்ற திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 2 மணியளவில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் நடைபெற்ற சண்டைக் காட்சியில் பெரிய கார்பன் டை ஆக்சைடு சிலிண்டரில் இருந்து சிறிய சிலிண்டருக்கு கார்பன் டை ஆக்சைடு மாற்றும்போது திடீரென வெடித்து சிதறியது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்ததால் வேலை செய்து கொண்டிருந்த டெக்னிஷியன்கள் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் மதுரவாயில் பகுதியைச் சேர்ந்த மதன்(25), சூர்யா(23), நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த தினகரன்(24), குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல்(27), உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம் பண்டே(34) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக டெக்னிஷியன்கள் படுகாயமடைந்த 5 பேரையும் மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த மதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.

படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த மேலும் சிலரும் காயமடைந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அதில், சண்டைக் காட்சியின்போது நெருப்பு வரவழைப்பதற்காக ஒரு சிலிண்டரில் இருந்து மற்றொரு சிலிண்டருக்கு கார்பன் டை ஆக்சைடு நிரப்பும்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இதனிடையே, வெடிப்பொருட்கள் குறித்து சோதனை செய்யும் நிபுணர்கள் உதவியுடன் விபத்திற்கான காரணம் குறித்து ஓட்டேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் சண்டை பயிற்சியாளர் சில்வா ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர். சம்பவம் குறித்து ஓட்டேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

* அனுமதி இல்லாமல் ஷூட்டிங்
புளியந்தோப்பு பின்னி மில் பகுதியில் பொதுவாக ஷூட்டிங் நடக்கும்போது காவல் நிலையத்தில் எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் ஷூட்டிங் நடத்துகின்றனர். தனியார் இடம் என்பதால் லோக்கல் காவல் நிலையத்தில் எந்தவித அனுமதியும் வாங்குவது கிடையாது இதனால் அவ்வப்போது திடீரென ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் மட்டுமே போலீசார் உள்ளே நுழைகின்றனர்.

ஏற்கனவே இதே பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சூட்டிங் நடக்கும்போது சாரம் சரிந்து விழுந்து இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் எட்டுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவ்வாறு அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படுவதால் இந்த பகுதியில் சூட்டிங் நடத்துவதற்கு முன்பு போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் தகுந்த பாதுகாப்பு நெறிமுறைகளுடன் சூட்டிங் நடத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: