தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்: சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறைக்கு மாற்றம்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தால் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றப்பட்டு, சிறைத்துறை டிஜிபியாக அமர்த்தப்பட்டுள்ளார். புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்தது. இதனால் தேர்தல் ஆணைய உத்தரவின்படி, காவல்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன.

அதன்படி, தமிழகத்திற்கான பொறுப்பு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டார். இந்த சூழலில், தேர்தல் முடிந்து தவெக தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளதால், காவல்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை போலீஸ் கமிஷனராக அமல்ராஜ், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக அன்பு, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக அருண் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தமிழகத்தின் புதிய நிரந்தர சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனம் தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் ஒன்றிய அரசுடன் தமிழக அதிகாரிகள் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். அதை தொடர்ந்து, தமிழகத்தின் புதிய டிஜிபி பதவிக்காக ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால் ஆகிய 3 பேரின் பெயர் பட்டியல் யுபிஎஸ்சியில் இருந்து தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது. இதில், தமிழக டிஜிபி பதவிக்கு ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டார்.

இதனால், நேற்று முன்தினம் அவர், மத்திய எல்லை பாதுகாப்பு படையில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள மகேஷ் குமார் அகர்வால் நேற்று காலை 11.26 மணிக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள டிஜிபி அறைக்கு வந்து, தமிழ்நாடு காவல்துறையின் 34வது டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் கையெழுத்து போட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய டிஜிபிக்கு தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அன்பு, சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், உளவுத்துறை ஐஜி அஸ்ரா கர்க் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து காவல்துறை இயக்குநர் அலுவலகத்தல் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணில் மலர் வளையம் வைத்து டிஜிபி மரியாதை செலுத்தினார்.

தமிழக காவல்துறையின் 34வது டிஜிபியான மகேஷ்குமார் அகர்வால், பஞ்சாப் மாநிலத்தில் பதிண்டா நகரில் பிறந்தவர். சட்டம்- ஒழுங்கு பணியில் மிகுந்த அனுபவம் கொண்டவர். சட்டப்பிரிவில் பி.ஏ பட்டமும், வழக்கறிஞருக்கான சட்டப்படிப்பும் படித்தவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளை நன்கு அறிந்தவர். 1994ம் ஆண்டு தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியான அவர், சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையராக 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர். சென்னை போக்குவரத்து துணை ஆணையர், தூத்துக்குடி எஸ்பி ஆக இருந்தவர்.

சிசிடிவி கேமராக்களை சென்னை நகரில் நிறுவ முக்கிய பங்காற்றியவர். காவல்துறையில் நைட் க்ரைம் டூ ஜீரோ என்ற திட்டத்தை முதல் முதலில் அறிமுகப்படுத்தியவர். சேலம் ரயில் கொள்ளை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை கையாண்டவர். இந்நிலையில், தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக காவல்துறை தலைமை இயக்குநராக பதவி வகித்து வந்த சந்தீப் ராய் ரத்தோர், சென்னை சிறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சிறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை கூடுதல் இயக்குநராகப் பணிபுரிந்து வந்த சங்கர், தற்போது காலியாக உள்ள சென்னை அமலாக்கப் பிரிவு சிஐடி கூடுதல் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதுவரை கூடுதல் இயக்குநர் (ஏடிஜிபி) அந்தஸ்தில் இருந்த சிறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநர் பதவி, தற்போது டிஜிபி சந்தீப் ராய் ரத்தோரின் புதிய நியமனத்திற்காக டிஜிபி அந்தஸ்திற்கு தரம் உயர்த்தப்பட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறை மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நேற்று மாலை 4 மணிக்கு பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு உயர் காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

* 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவிக்கு வருவது சந்தேகம்
தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1972ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி பிறந்தவர். இதனால் அவர் 2032ம் ஆண்டு மார்ச் மாதம் தான் ஓய்வு பெறுவார். நிரந்தர டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள மகேஷ்குமார் அகர்வால், கண்டிப்பாக 2 ஆண்டுகள் சட்டம் ஒழுங்கு பதவியில் நீடிப்பார். ஆனால் அரசு நினைத்தால் அவர் ஓய்வு பெறும்வரை அதாவது தொடர்ந்து 6 ஆண்டுகள் பணியில் நீடிப்பார்.

இவருக்கு மூத்தவரான சந்தீப் ராய் ரத்தோர் 2028ம் ஆண்டு பிப்ரவரியில் ஓய்வு பெறுவார். அதே ஆண்டு டிசம்பரில் ராஜீவ்குமார் ஓய்வு பெறுவார். வன்னியப்பெருமாள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு பெறுகிறார். மேலும் மகேஷ்குமார் அகர்வாலுக்கு ஜூனியராக உள்ள வெங்கட்ராமன் 2028 மே மாதமும், வினித் தேவ் வாங்டே 2030 மே மாதமும், சஞ்சய் மாத்தூர் 2028 மார்ச் மாதமும், டேவிட்சன் தேவாசீர்வாதம் 2028 ஜனவரி மாதமும்,

சந்தீப் மித்தல் 2028 ஆகஸ்ட் மாதமும், பாலநாகதேவி 2029 நவம்பர் மாதமும், சங்கர் 2028 ஜூன் மாதமும், அமல்ராஜ் 2031 ஜூன் மாதமும், ஆயுஸ்மணி திவாரி 2031 ஜனவரி மாதமும், சுமீத் சரண் 2031 செப்டம்பர் மாதமும், அபின் தினேஷ் மோடக் 2030 ஜூன் மாதமும், சஞ்சய்குமார் 2027 ஜூலை மாதமும், தினகரன் 2031 ஜூலை மாதமும் ஓய்வு பெறுகின்றனர்.

அதாவது சீனியராக உள்ள 3 போலீஸ் அதிகாரிகளும், ஜூனியர்களாக உள்ள 13 போலீஸ் அதிகாரிகளும் சட்டம் ஒழுங்கு பணிக்கு வருவது சந்தேகம்தான் என்கின்றனர் போலீஸ் உயர் அதிகாரிகள். அதேநேரம் 2 ஆண்டுகளுக்கு பிறகு மகேஷ்குமார் அகர்வாலை, ஒரு வேலை மாற்றினால் மட்டுமே ஜூனியர்களுக்கு சட்டம் ஒழுங்கு பணி வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

* பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பேட்டி
தமிழக காவல்துறையின் 34வது டிஜிபியாக பொறுப்பேற்றுக்கொண்ட மகேஷ்குமார் அகர்வால், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக டிஜிபியாக நியமித்து மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை காப்பதற்கும், போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல், தமிழகம் முழுவதும் சைபர் க்ரைம் குற்றங்களை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: