சென்னை: தவெக அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடிக்கு தொடர்ச்சியாக எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் பயிர் கடன் தள்ளுபடி விவகாரத்தில், மகாராஷ்டிரா அரசைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என்று முதல்வர் விஜய்க்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். இது தொடர்பான அறிக்கையில், மகாராஷ்டிரா அரசைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் முதல்வர் விஜய் அவர்களே!
மகாராஷ்டிராவில் சுமார் 56 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்யவும், முறையாக பயிர்க் கடனைத் திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு ரூ.50,000 ஊக்கத் தொகை வழங்கவும் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புதல் வழங்கியுள்ள செய்தி உங்களுக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
விவசாயிகள் நலனை எப்படிக் காப்பது என்பதை மகாராஷ்டிர பாஜக அரசைப் பார்த்து இனியாவது நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். மாற்று சக்தி, மாற்று சக்தி என்று வீணாக முழங்குவதைவிட மற்ற மாநிலங்களைப் பார்த்து நன்முயற்சிகளைப் பின்பற்றுங்கள். உடனடியாக, தமிழக விவசாயிகளின் துயர் துடைக்கும் விதமாக, ஏற்கனவே அறிவித்த ஏமாற்றுத் தள்ளுபடியை திரும்பப் பெற்று, கொடுத்த வாக்குறுதிப்படி பயிர்க் கடனை முழுமையாக ரத்து செய்யுங்கள் என்று நயினார் நாகேந்திரன் முதல்வரை வலியுறுத்தி உள்ளார்.
